சென்னை
தமிழக அரசு இலங்கை அகதிகள் முகாம் என்னும் பெயரை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என மாற்றி உள்ளது.
இலங்கையில் இருந்து வந்துள்ள தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடம் இலங்கை அகதிகள் முகாம் என அழைக்கப்பட்டு வந்தது. இவர்களை அகதிகள் என அழைப்பதற்குப் பல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். முந்தைய ஆட்சியில் இருந்தே இந்த பெயரை மாற்றக் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் அதில் அப்போதைய அரசு கவனம் செலுத்தவில்லை.
தற்போது திமுக அரசு பதவி ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், “இலங்கை தமிழர்கள் முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7469 வீடுகள் புதியதாகக் கட்டித்தரப்படும், தவிரக் குடிநீர் வசதி மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த 30 கோடி ஒதுக்கீடு, வாழ்க்கைத் தரம் மேம்பாடு நிதி ஆண்டுதோறும் 5 கோடி, 300 சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதியாக 6.16 கோடி ஒதுக்கீடு, விலையில் எரிவாயு இணைப்பு மற்றும் எரிவாயு உருளை மானியத்திற்கு 10.50 கோடி ஒதுக்கீடு” எனப் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
மேலும் மு க ஸ்டாலின், “நாம் எப்போதும் இலங்கைத் தமிழருக்கு உறுதுணையாக இருப்போம். இலங்கைத் தமிழர்கள் அகதி முகாம் என இனி அழைக்காமல் இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம்கள் என அழைப்போம், நாம் இருக்கும் வரை அவர்கள் அகதிகள் இல்லை” எனவும் அறிவித்தார். இந்நிலையில் இன்று இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம், ‘இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்’ எனப் பெயர் மாற்றத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.