சென்னை: மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னைக்கு ரூ.450 கோடியை மத்திய அரசு நிவாரண நிதியாக அறிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசு ரூ.5000 கோடி கேட்ட நிலையில், மத்திய பாஜகஅரசு வெறும் ரூ.450 கோடியை ஒதுக்கி உள்ளது.

சென்னையை நெருங்கிய மிக்ஜாம் புயல் கடந்த 4ந்தேதி (திங்கள், டிசம்பர் 4)  சென்னை வழியாக ஆந்திரா சென்று கரையை கடந்ததது. இந்த புயல் காரணமாக சென்னை மற்றும் , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளன. மேலும் வரலாறு காணாத மழையால், சென்னை வெள்ளத்தில் மிதத்தது.  சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் உள்ள   அனைத்து எரிகளும் நிரம்பின.  இதனால் பாதுகாப்பு கருதி ஏரிகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக,  சென்னை  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது.

மேலும், சூறாவளி காற்றால்,  சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்தன. நீர் நிரம்பியதால், முக்கிய சுரங்கப் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், சில இடங்களில் படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.  பல பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல்  இன்னும் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கின்றனர்.

வெள்ளப்பாதிப்பில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது. இருந்தாலும்,  பல இடங்களில் தண்ணீா் வடியவில்லை, மின்சாரம், தண்ணீா் இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பு குறித்து மத்தியஅரசு அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும் என்றும். ரூ.5060 கோடி நிதி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின்  கடிதம் எழுதினார். மேலும், நாடாளுமன்றத்திலும் திமுக எம்.பி.க்கள் மத்தியஅரசை வலியுறுத்தினர். மேலும் மத்திய அமைச்சரை வெள்ளப்பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அனுப்பி வைத்த பிரதமர் மோடி, பாதிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடமும் பேசினார்.

இந்த நிலையில்,. தமிழகத்திற்கு வெள்ளத்தடுப்பு திட்டத்திற்காக முதல் தவணையாக இதே தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.   மாநில பேரிடர் நிவாரண நிதித் திட்டத்தின் கீழ்  தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி நிதியை விடுவிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு ரூ.450 கோடி வழங்க பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்ததையடுத்து, தமிழகத்துக்கு வழக்கமாக வழங்க வேண்டிய நிதியை முன்கூட்டியே விடுவிக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, மாநில பேரிடர் நிவாரண நிதித் திட்டத்தின் கீழ் முதல் தவணை ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது தவணையை தமிழகம் மற்றும் ஆந்திரத்துக்கு முன்கூட்டியே விடுவித்தது மத்திய அரசு. அதன்படி, தமிழகத்துக்கு ரூ.450 கோடியும், ரூ.493 கோடி ஆந்திரத்துக்கும் முன்கூட்டியே விடுவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக,  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், சென்னை கடந்த 8 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மூன்றாவது மிகப்பெரிய வெள்ளத்தை எதிர்கொள்கிறது. பெருநகரங்களில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை அண்மைக் காலமாக நாம் அதிகம் பார்க்கிறோம். மேலும், தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ், சென்னை வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து 561.29 கோடி ஒதுக்கீடு செய்ய பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு பிறப்பித்திருப்பதையடுத்து, அந்த நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், சென்னையில் ஏற்படும் வெள்ளத்தை தடுக்கும் வகையில் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார்