சென்னை: பத்திரிகையாளர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் குடும்ப நல நிதியை இருமடங்காக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பத்திரிகையாளர் மன்றம் நன்றி தெரிவித்து உள்ளது.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கடந்த 25 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. பதிவுத்துறை சட்டத்தின்படி சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தல் டிசம்பர் 15 ஆம் தேதி நடத்தப்பட்டது. நீதிக்கான கூட்டணி மற்றும் ஒற்றுமை கூட்டணி போட்டியிட்டது. அதன்படி, கடந்த 15 ஆம் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைதொடர்ந்து, வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட்டது. இதில், நீதிக்கான கூட்டணி வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து நீதிக்கான கூட்டணி தலைவர் – சுரேஷ் வேதநாயகம், பொதுச் செயலாளர் – அஃசீப் முகமது, இணைச் செயலாளர் – நெல்சன் சேவியர், பொருளாளர் – மணிகண்டன், துணைத் தலைவர் – சுந்தர பாரதி, துணைத் தலைவர் – மதன் ஆகியோர் வெற்றி பெற்றனர். நிர்வாக குழு உறுப்பினர்களாக, ஸ்டாலின், பழனி, கவாஸ்கர், விஜய் கோபால், அகிலா உள்ளிட்டோர் தேர்தலில் வெற்றி பெற்றனர். இந்நிலையில், சென்னை பத்திரிகையாளர் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள், முதலமைச்சர் மு.க,.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இது தொடர்பாக பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள். அவர்கள் வாழ்த்து பெற வந்தபோது, அரசு பல்வேறு பத்திரிகையாளர் நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செய்து வந்தாலும், இன்னும் சில கோரிக்கைகள் இருப்பதாகத் தெரிவித்தனர். அரசு அவற்றையும் படிப்படியாக நிறைவேற்றித் தரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘Journalism’-த்திற்கும் ‘Sensationalism’-த்திற்கும் உள்ள வேறுபாட்டினையும், அவை சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் இளைய தலைமுறை ஊடகவியலாளர்களுக்குப் பயிற்றுவித்து, அறமுடன் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் உணர்த்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் குடும்ப நல நிதி உயர்த்தி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று பத்திரிகையாளர் குடும்ப நல நிதியிணை இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில், ” அரசின் கவனமான பரிசீலனைக்குப் பின்னர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியானது, பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.10,00,000 என்றும், 15 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும். போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ7,50,000 என்றும், 10 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.5,00,000 என்றும், 5 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.2,50,000 என்றும் நடைமுறையிலுள்ள விதிகளின்படி, பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியினை உயர்த்தி வழங்கிட அரசு ஆணையிடுகிறது.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி திட்டத்தில் உதவி பெற உரிய சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வாயிலாக, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையினைப் பெற்று இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை அவர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பத்திரிகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழுவே இத்திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கான விண்ணப்பங்களையும் பரிசீலிக்கும். அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஆணைகள் வெளியிடப்படும். இத்திட்டத்திற்கான செலவினங்கள் “முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில்” இருந்து வழங்கப்படும்.
இக்குடும்ப உதவி நிதி திட்டம் அரசாணை வெளியிடப்படும் நாள் முதல் அமல்படுத்தப்படும். இவ்வாணை நிதித்துறையின் அலுவல் சார்பற்ற குறிப்பு எண்.714/JS(PAP)/CMPRF/24 நாள். 18.12.2024-ல் பெறப்பட்ட ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வருக்கு நன்றி:
தங்களது கோரிக்கையை ஏற்று, பத்திரிகையாளர் குடும்ப நல நிதியினை இருமடங்காக உயர்த்தி வழங்கி உத்தரவிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் தெரிவித்துள்ளது.