சென்னை: பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக, தமிழ்நாடு அந்த பகுதியில் உள்ள சுமார் 13 கிராமங்களை காலி செய்கிறது. இதற்கான நில எடுப்பு பணிக்கான உத்தரவு வெளியிடப்பட்டு உள்ளது. இதனால் 13 கிராம மக்கள் செய்வதறியாது பரிதவித்து நிற்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், சென்னையின் 2வது விமான நிலையம் அமைய உள்ளது.  இந்த  பரந்தூர் பசுமை விமான நிலையம் சென்னையில் இருந்து 65 ஆவது கிலோமீட்டர் இருக்கிறது. சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பெருமதூரில் இருந்து 26 -வது கிலோமீட்டரிலும் , சுங்குவார் சத்திரத்தில் இருந்து 12 – வது கிலோமீட்டரிலும் இருக்கிறது பரந்தூர்.

புதிய விமான நிலையம் அமைப்பதற்காக  பரந்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்துவதற்கு,  அந்த பகுதியில் உள்ள, அதாவது காஞ்சிபுரம் மாவட்டத்தின் திருப்பெரும்பதூர் வட்டத்தில் உள்ள,எடையார் பாக்கம், குணகரம்பாக்கம், மகாதேவி மங்கலம், ஏகனாபுரம், அக்மாபுரம், சிங்கிலி பாடி. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் வட்டத்திலேயே உள்ள வளத்தூர், பரந்தூர், நெல்வாய், தண்டலம், பிடவூர், மடப்புரம் ஆகிய 13  கிராம  மக்கள் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த விமான நிலைய அறிவிப்பு வெளியானதிலிருந்து, அப்பகுதியில் உள்ள கிராமமக்கள் ஒன்றிணைந்து அரசின் இந்நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தை எதிர்த்து ஏகனாபுரம் மற்றும் சுற்று வட்டார மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். ஆர்ப்பாட்டம், சாலை மறியல், கருப்பு கொடி ஏற்றம், பட்டினி போராட்டம், மாணவர்கள் பள்ளி புறக்கணிப்பு, கோட்டை நோக்கி நடைப்பயணம் என ஏகனாபுரம் மக்கள் நடத்தி வரும் போராட்டம் இரண்டு ஆண்டுகளை நெருங்கி உள்ளது.

இந்த போராட்டத்துக்கு முக்கிய எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்காமல், மக்கள் படும் துயரங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது, அரசியல் கட்சிகளின் பச்சோந்தி தனத்தை தோலூரிப்பதாக சமூக ஆர்வலர்களும், இயற்கை ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், மற்ற ஊர் மக்கள், சமூக ஆர்வலர்கள் அந்த பகுதிக்குள் நுழையாதவாறு திமுக அரசு, பலத்த பாதுகாப்பு போட்டு, கிராம மக்களை சிறை வைத்துள்ளது.

பரந்தூர் விமான நிலைய திட்டம் பற்றி அரசு அறிவித்த நாளிலிருந்து 13 கிராமங்களும் தங்களது வாழ்வாதாரம் பறிபோகும் என்ற அச்சத்துடன் நாளும், பொழுதும் போராடி வருகின்றன. இதன் காரணமாக அந்த கிராமங்கள்  இந்திய வரைபடத்தில் இருந்து  அகற்றப்படும் நிலை உருவாகி உள்ளது.

இந்த கிராமங்களில் உள்ள 4,563 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. அத்துடன்,  ந்த ஊர்களில்   அனைத்து வீடுகளும் நீர் நிலைகளும் வயல்வெளிகளும் கையகப்படுத்தப்படும் நிலையில் இருக்கின்றன.

இந்த நிலையில், புதிய விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் அரசாணையை 2023, டிசம்பர் மாதம் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் 32.04.05 சதுர மீட்டர் மற்றும் 2.77.76 சதுர மீட்டர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பை 2024, பிப்ரவரி மாதம் அரசு வெளியிட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து , தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள சிறுவள்ளூர் கிராமத்தில் 1.75.412 சதுர மீட்டர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பை அரசு இன்று (மார்ச் 12) வெளியிட்டுள்ளது.

நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தனி மாவட்ட வருவாய் அலுவலர், புதிய பசுமை வெளி விமான நிலைய திட்டம், மண்டலம் 1, பிளாட் எண் – 13 மற்றும் 14, திருப்பதி எஸ்டேட் எண். 59, திம்ம சமுத்திரம் கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம், என்ற முகவரியில் எழுத்து மூலமாக அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 30ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும்  அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு, நிலம் எடுப்பது தொடர்பான  உத்தரவை வெளியிட்டுள்ளதால், விரைவில் மக்கள் வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதி விவசாய மக்கள் செய்வதறியாது, தங்களது வாழ்வாதாரம் பறிபோகிறதே என்ற பரிதவிப்பில் திகைந்து நிற்கின்றனர்.