சென்னை
தமிழகத்தில் நாளை முதல் சிறு வணிகர்கள் கடை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக மத்திய அரசு நாடெங்கும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அறிவித்தது. அதையொட்டி அத்தியாவசிய பொருட்களான, பால், மளிகை, மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் விற்கும் கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. மக்கள் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆயினும் கொரோனா பாதிப்பு குறையவில்லை.
இதையொட்டி மத்திய அரசு ஊரடங்கை மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டித்தது. மேலும் ஏப்ரல் 20 ஆம் தேதி அன்று அந்தந்த மாநில நிலையைப் பொறுத்து ஊரடங்கு விதிகளை தளர்த்தலாம் எனக் கூறியது. இது குறித்து முடிவு செய்யத் தமிழக அரசு தலைமைச் செயலர் தலைமையில் ஒரு பேரிடர் மேலாண்மைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்தக் குழு இன்று ஒரு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருகின்றன.
கடந்த 20 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் மே மாதம் 3ஆம் தேதி வரை எவ்வித விதி தளர்வும் இன்றி ஊரடங்கைத் தொடர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இன்றைய கூட்டத்தில் மத்திய அரசின் வழி காட்டுதலின்படி ஊரடங்கு விதிகளில் ஒரு சில மாறுதல்கள் கொண்டு வர முடிவு செய்யபபட்டுளது. எனவே இது குறித்து ஒரு அரசாணையை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி உற்பத்தி நடவடிக்கைகளுக்குத் தேவையான அத்தியாவசியமான பொருட்கள், மொத்த வியாபார நிலையங்கள், சில்லறை விற்பனை செய்யும் பெரிய மற்றும் பெட்டிக்கடைகள் இ காமர்ஸ் நிறுவனங்கள், பேக்கரி போன்ற உணவு பதனிடும் தொழிலகங்கள், பால் மற்றும் பால் பொருட்கள் தயாரித்தல், மாவு மில்கள், அரிசி மில்கள் போன்ற நகரில் உள்ள வ்ர்தக நிறுவனங்கள் நாளை முதல் இயங்கலாம்
விதைகள் மற்றும் தோட்டக்கலை தொடர்பான பொருட்கள் விற்பனை, பாக்கிங், உள்ளிட்ட பணிகள் நடக்கலாம். விவசாயம் மற்றும் தோட்டக்கலை தொடர்பான ஆய்வுக் கூடங்கள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது