சென்னை

தமிழக அரசு கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக ரூ.1132 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

தற்போதைய திமுக தலைமையிலான தமிழக அரசு கோவை மாவட்டத்தைப் புறக்கணித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குறை கூறி வருகின்றனர்.  இதற்கு காரணம் சென்ற சட்டப்பேரவை தேர்தலில் இந்த பகுதியில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு நல்ல ஆதரவு இருந்தது என அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.   இதற்கு தமிழக அமைச்சரவை மறுத்து பதில் அளித்துள்ளது.

அதில் ”திமுக அரசு கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தை, எவ்விதத்திலும் புறக்கணிக்கவில்லை. தற்போது கோவை அவிநாசி சாலை மேம்பாலப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு ஐந்து இடங்களில் ஏறு வழிகள், இறங்கு வழிகள் ஏற்படுத்தப்படுகின்றன.  கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றி ஆலோசித்து வருகிறோம். ” எனத் தெரிவித்தது.

கோவையில் உள்ள விமான நிலைய விரிவாக்கம் செய்யும் திட்டம் சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.   ஆனால் அதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாமல் இருந்தது.  தற்போது இந்த விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த ரூ.1,132 கோடி ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.  இந்த பணத்தின் மூலம் கோவை மாவட்ட ஆட்சியர் விரைவில் நிலம் கையகப் பணிகளை தொடங்க உள்ளார்.