சென்னை

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் நிலத்தில் விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து தமிழகத்தில் பல கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.    இவை அனைத்தும் வெகு நாட்களாகத் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்களாகும்.  இவ்வாறு மீட்கப்பட்ட நிலங்களை மீண்டும் யாரும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க இந்த நிலங்களில் பல மக்கள் நலப் பணிகளை அரசு செய்து வருகிறது.

அவ்வகையில் சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீசுவரர் கோவிலுக்குச் சொந்தமான 46 கிரவுண்ட் நிலத்தில் ஏழை மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் உள்ள எல்லைகளில் கற்கள் ஊன்றி அடையாளம் இடும் பணியும் தொடங்கி உள்ளது.

 

 

எல்லைக் கற்கள்

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது முகநூலில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (04.10.21), மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான 46 கிரவுன்ட் நிலத்தில் ஏழை-எளிய மாணவர்கள் பயன்படும் வகையில் விளையாட்டு மைதானத்தைத் திறந்து வைத்து, விளையாட்டுப் பொருட்களை வழங்கினோம்.

இதன் தொடர்ச்சியாக, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை எல்லைக் கல் ஊன்றி அதில் வெள்ளை நிற வண்ணம் அடிக்கப்பட்டு, சிவப்பு நிறத்தில் HRCE என்று தனித்துவ அடையாளத்தில் எழுதப்பட்டிருக்கும் எல்லைக் கல்லை வைக்கும் பணியைத் தொடங்கி வைத்தோம். ” எனப் பதிந்துள்ளார்.