சென்னை
உக்ரைன் நாட்டில் சிக்கி உள்ள மாணவர்களை மீட்க தமிழக அரசு ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
உக்ரைன் நாட்டில் ஏராளமான இந்திய மாணவர்கள் மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களில் பலர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தற்போது உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால் அங்குள்ள விமான நிலையங்கள் முழுவதுமாக நாசமாகின. இதனால் இந்திய மாணவர்களை மீட்டும் தாயகம் அழைத்து வர அண்டை நாடுகளுக்கு இந்திய அரசு விமானங்களை அனுப்பி வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை அண்டை நாடுகளுக்கு அழைத்து வர நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சரை குழுவினர் சந்தித்து விரைந்து தமிழக மாணவர்களை மீட்க வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசு உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் ரூ.2 கோடியை உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து டில்லி வரும் தமிழக மாணவர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வர ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு வந்த மாணவர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் செலவுகளுக்கு ரூ.1.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.