சென்னை
மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் இருந்து வருவோர் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும் கேரளா இரண்டாம் இடத்திலும் உள்ளன.
இதையொட்டி அவ்விரு மாநிலங்களிலும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாட்டினர் வருகை இவ்விரு மாநிலங்களும் அதிகம் உள்ளதால் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையொட்டி அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் கேரளா மற்றும் மகாராஷ்டிர மாநில விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவின் அண்டை மாநிலங்கள் எல்லைகளை முடி உள்ளன.
தமிழக அரசு, ”கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோர் 7 நாட்கள் தங்களை வீட்டினுள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.