சென்னை

நாளை தமிழக ஆளுநர் புதிய கல்விக் கொள்கை உள்ளிட்டவை குறித்து பல்கலை துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தற்போது தமிழக ஆளுநராக ஆர் என் ரவி பதவியில் உள்ளார்.  இவர் பதவி ஏற்றதில் இருந்து பல தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.  இதையொட்டி மாநிலத்தில் கடும் சர்ச்சைகள் உண்டாகி உள்ளது.   இவர் டில்லி சென்ற போது வழக்கத்துக்கு மாறாக பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தது பல ஊகங்களை எழுப்பியது.

நாளை காலை 10.30 மணிக்குத் தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைகளின் துணைவேந்தர்களுடன் ஆளுநர் மாளிகையில் ஆர் என் ரவி ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில்  பங்கேற்கச் சென்னை பல்கலை அண்ணா பெரியார் பாரதியார் பாரதிதாசன் பல்கலைகள் எம்.ஜி.ஆர். அரசு மருத்துவ பல்கலை மீன்வளம் வேளாண்மை பல்கலைகள் சட்ட பல்கலை என அனைத்து வித தமிழக பல்கலைகளின் துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் துணைவேந்தர்களுடன் உயர்கல்வி முதன்மைச் செயலர் கார்த்திகேயன் மற்றும் பிற பல்கலைகளின் துறைச் செயலர்களும் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது மத்திய கல்வித் துறை யு.ஜி.சி. போன்றவற்றின் உத்தரவுகளைப் பின்பற்றுவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக உயர்கல்வி துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.