சென்னை:  டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபு நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு  மீண்டும் பரிந்துரை செய்த நிலையில், அதை ஆளுநர் ரவி நிராகரித்து உள்ளதுடன், பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.

1987 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திர பாபு. நாகர்கோவிலைச் சேர்ந்த இவர், தமிழ்நாட்டின் காவல்துறை தலைமை இயக்குநராக அதாவது சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக இருந்தவர். சைலேந்திர பாபு கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி அன்று ஓய்வு பெற்றார். அவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கத் தமிழக அரசு முடிவு செய்தது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமனம் செய்ய முடிவு செய்து, அதற்கான தமிழக அரசு உயர்மட்டக் குழுவில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து, அரசு சார்பில் சைலேந்திரபாவுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக பரிந்துரை செய்து, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது.

அதை ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்து, அரசின் கோப்பை திருப்பி அனுப்பினார். இது சர்ச்சையானது. இதையடுத்து, அரசு தரப்பில், ஆளுநரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து மீண்டும் கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கோப்பையும் ஆளுநர் நிராகரித்து விட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி தலைவர் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி வேறு ஒருவரை தேர்வு செய்ய ஆளுநர் பரிந்துரைத்து உள்ளதாகவும்

இதற்கு வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறும்போது, ’’தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) தலைவராக நேர்மையாளரான முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை நியமிக்குமாறு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்தது. ஆனால் சைலேந்திர பாபுவுக்கு அந்தத் தகுதி இல்லை என்று தமிழ்நாடு அரசின் பரிந்துரையை கவர்னர் ரவி நிராகரித்திருப்பது அவரது அதிகார எல்லையை மீறிய தான்தோன்றித்தனமான சர்வதிகார முடிவாகும். தமிழக அரசு செய்கின்ற பரிந்துரைகளை எல்லாம் நிராகரிக்கும் கவர்னர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. மத்திய பா.ஜ.க. அரசின் ஏஜெண்டாகச் செயல்படுகின்ற தமிழக ஆளுநருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.