சென்னை

மிழக அரசு வரும் மார்ச் முதல் கடலோர மாவட்டங்களில் மீனவர் கணக்கெடுப்பைத் தொடங்க உள்ளது.

கடந்த 2010 ஆம் வருட கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 7.87 லட்சம் மீனவர்கள் உள்ளனர்.  நாட்டில் மீன் உற்பத்தியில் தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளது. தமிழக கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை, திருவாரூர், த்ஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மீனவர்கள்  வசித்து வருகின்றனர்.

வரும் மார்ச் மாதம் முதல் தமிழக அரசு மீனவர்கள் கணக்கெடுப்பைத் தொடங்க உள்ளது.   இந்த கணக்கெடுப்பில் முதல் முறையாக மீனவர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலை குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளன.   சுமார் 6 மாதங்களுக்கு இந்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.  அத்துடன் மீனவர்கள் அதிகம் உள்ள இடங்கள், அஙுகு வசிக்கும் மீனவ சமுதாயத்தினருக்கான தற்போதுள்ள நலத் திட்டங்கள்  போன்றவையும் கணக்கெடுக்கப்பட உள்ளன.

இந்த ஆறு மாத கணக்கெடுப்பில் மீனவர்களின் வயது, படிப்பறிவு, தொழில், அவர்களிடம் உள்ள மீன் பிடிக்கும் உபகரணங்கள், படகுகளின் விவரங்கள் உள்ளிட்ட பல கணக்கெடுக்கப்பட உள்ளன.   இந்த கணக்கெடுப்பின் மூலம் கடந்த 15 வருடங்களாக மீனவர் நலனுக்கு அமைக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் திட்டங்களின் மூலம் அவர்கள் அடைந்த பயன்கள் ஆகியவற்றை அரசு ஆய்வு செய்ய உள்ளது.  மேலும் இதன் மூலம் புதிய நலத்திட்டங்களை எந்த அடிப்படையில் அமைக்க வேண்டும் என்பதை அரசு அறிந்துக் கொள்ளும் என மீன்வளத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மீனவர் சங்க செயலர் போஸ், “மத்திய மாநில அரசுகள் மீனவர்கள் வாழ்வாதார முன்னேற்றத்துக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.   இலங்கையில் சுமார் 200 மீன்பிடி படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.  பல மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ளனர்.   இதனால் நமது எல்லைக்குள் மீன் பிடிக்கவும் அச்சம் நிலவுகிறது.  ஆழ்கடல் மீனவர்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகை போதுமானதாக இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.