சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், 2024 – 25ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள  அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் 2024 – 2025ஆம் கல்வி ஆண்டிற்கு, மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர்கள் சேர்க்கை துவங்க வேண்டும் எனவும், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஏற்படுத்தி அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி, மாணவர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவிடப்பட்டாலும், அங்கு மாணவரின் சேர்க்கை எண்ணிக்கையானது தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இது போன்ற சூழ்நிலையால் பள்ளிகளை மூட வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. அரசு பள்ளியில் உள்ள உட்கட்டமைப்பு குறித்து பொதுமக்களுக்கு சரிவர தெரியாமல் இருக்கிறது.

இந்த நிலையில், பள்ளி கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, தொடக்க கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர், 2024- 25ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை மார்ச் ஒன்றாம் தேதி முதல் தொடங்க வேண்டும் எனவும், அதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகளையும் வரையறை செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,   அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2024-25ஆம் கல்வியாண்டில் 5 வயது பூர்த்தியடைந்த மற்றும் பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் மார்ச் 1ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி, அதில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களையும் பங்கு பெறச் செய்து, அரசு ஆசிரியர்கள் அனைவரையும் கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையினை சிறப்பு முகாம் அடிப்படையில் கோடை விடுமுறைக்கு முன்னரே மேற்கொள்ள, பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பொறுப்புக்களை பிரித்து வழங்கி, சேர்க்கையை அதிகரித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள்: ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி, மாணவர் எண்ணிக்கையை இரட்டை இலக்கத்திற்கு கட்டாயமாக உயர்த்த அறிவுறுத்த வேண்டும். பள்ளிகளில் மாணவர் சேர்க்க விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட வேண்டும்.

மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்களை (PRO) அணுகி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக் குறித்து செய்திகள் வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இப்பணியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் விரைந்து முடிக்க வேண்டும்.

தொடக்கக் கல்வி பதிவேடு: ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மக்கள்தொகை கணக்கெடுப்பை வீடுகள் தோறும் சென்று சரியாகவும், துல்லியமாகவும் எடுத்து, தொடக்கக் கல்வி பதிவேடானது (EER) ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் புதுப்பிக்கப்படுகிறது. இந்த பதிவேட்டின் படி ஐந்து வயது நிரம்பிய அனைத்து மாணவர்களையும் முதல் வகுப்பில் சேர்த்தல் வேண்டும்.

ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு: பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களான தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் ஆகியோர் ஒன்றிணைந்து குழுவாக செயல்பட்டு, பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் பற்றி கலந்தாலோசிக்கலாம்.

மேலும், அரசு பள்ளிகளில் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில், 2024 – 2025ஆம் கல்வியாண்டில், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க வேண்டும்”.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.