சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக செப் 13 ஆம் தேதி தமிழ்நாடு அரசு சட்ட பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். நாளை நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் நாளை மறுநாள் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படுவதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம் 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் பொதுநிலை பட்ஜெட்டும், 14ந்தேதி வேளாண் பட்ஜெட்டும், காகிதமில்லா முறையில் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றது. தொடர்ந்து, ஆகஸ்டு 20ந்தேதி முதல் மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. வருகிற 13-ஆம் தேதி (திங்கட்கிழமை) யுடன் கூட்டத்தொடர் முடிவடை உள்ளது.
நாளை மறுதினம் (13ந்தேதி) தமிழக சட்டப்பேரவையில், காவல்துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் கேள்வி நேரம் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசுவார் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வான வரும் 13ந்தேதி , நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் பேரவையில் வரவுள்ளது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு அரசின் தீர்மானம் மூலம், மத்திய அரசை வலியுறுத்தி நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்றும் கூறியுள்ளார்.