சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள்  மழைக்கு வாய்ப்புள்ளது. சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தேனி,  நீலகிரி, கோவை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் நாளை முதல் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்க கடலில் ஏற்கனவே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளதால், மணிக்கு 40முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.