சென்னை: 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு தேர்வுகள் வரும் 15ம் தேதி முதல் 25 வரை நடைபெறுகிறது. மாதம் 26ம் தேதி நடைபெறுவதாக இருந்த பிளஸ் 1 தேர்வு வருகிற 16ம் தேதியும், மார்ச் 24ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு எழுத இயலாதவர்களுக்கு 18-ந்தேதியும் நடக்கின்றன.
இந்நிலையில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது: பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் விருப்பத்தின் அடிப்படையில் வீட்டிற்கு அனுப்பபடுவர்.
வீட்டிற்கு அனுப்பப்படும் மாணவர்கள் துணைத்தேர்வில் தேர்வுகளை எழுதிக்கொள்ளலாம். காய்ச்சல் இருந்தாலும் மாணவர்கள் விரும்பினால் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
மாணவர்களுக்கு காலையிலும் மாலையிலும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும். உடல்நிலை குறித்த விவரங்களை பதிவேட்டில் எழுத வேண்டும். அளவுக்கு அதிகமாக காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.