சென்னை:
தமிழக அரசு, ஏழை மக்களுக்கு வழங்கும் இலவச வேஷ்டி கேரளாவில் தாராளமாக விற்பனையாவது அம்பலமாகி உள்ளது.
இது குறித்து மூத்த பத்திரிகையாளர்,புகைப்பட நிபுணர் மீடியா ராமு, தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:
“சமீபத்தில் திருவனந்தபுரம் பத்மநாதர் கோவிலுக்கு சென்றிருந்தேன். வேஷ்டி மட்டும் கட்டிக்கொண்டு செல்ல வேண்டும் என்ற நடைமுறை அங்கு உண்டு. இதற்காக கோவில் வாசலில் வேஷ்டி விற்கும் கடைகள் இருக்கின்றன. அங்கு சென்று 90 ரூபாய் கொடுத்து ஒரு வேட்டியை வாங்கினேன். வேஷ்டியை பிரித்துப் பார்த்தவுடன் அதிர்ந்துவிட்டேன்.
தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச வேஷ்டி அது! அதில் தமிழ்நாடு அரசு முத்திரையும் அப்படியே இருக்கிறது! பிறகு விசாரித்ததில் பல கடைகளிலும் பண்டல் பண்டலாக தமிழகத்து இலவச வேஷ்டிகள் விற்பனையாவது தெரிந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்தனை ஆயிரம் வேஷ்டிகள் கேரளாவுக்கு வந்திருக்கின்றன என்றால், தனிப்பட்ட நபர்கள் இங்கு வந்து விற்றிருக்க முடியாது. ஏழை மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய வேஷ்டியை அவர்களுக்கு அளிக்காமல் பொய்க்கணக்கு காண்பித்து மொத்தமாக அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.
தமிழக அரசு அளிக்கும் இலவச அரிசி வெளிமாநிலங்களில் விற்பனை செய்யப்படுவது காலம்காலமாக நடந்துவிருகிறது. அதே போல முந்தைய தி.மு.க. அரசு அளித்த இலவச தொலைக்காட்சி பெட்டி, அ.தி.மு.க. அரசு அளித்த இலவச ஃபேன், மிக்சி, கிரைண்டர் ஆகியவையும் வெளி மாநிலங்களில் விற்பனை செய்யப்படுவது செய்தியாக வெளிவந்திருக்கின்றன. இப்போது இலவச வேட்டியும் விற்பனைக்கு வந்திருக்கிறது.