மதுரை
தமிழ்நாடு பட்டாசு விற்பனையாளர் சங்கம் பட்டாசு தொழிலைக் காக்க தீர்மானம் இயற்ற அரசி வலியுறுத்தி உள்ளது.
இந்தியாவில் சிவகாசி பகுதியில் ஏராளமான பட்டாசு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்த தொழிற்சாலைகளுக்கு விபத்து தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புக்கள் ஏராளமான கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு புகையால் மாசடைவதாகப் பேட்டி அளித்த ஒரு புகழ்பெற்ற நடிகையின் புகைபிடிக்கும் படம் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது நினைவிருக்கும்.
மதுரையில் நேற்று தமிழக பட்டாசு வர்த்தகர்கள் சங்கக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் வீ ராஜா சந்திரசேகரன் தனது உரையில், “பட்டாசால் காற்று மாசடைவதாகக் காரணம் சொல்லி இந்த தொழிலுக்குத் தடை விதிக்க கோரிக்கை எழுந்து வருகிறது. இது தவறானதாகும், பட்டாசால் ஏற்படும் புகை மாசு 48 மணி நேரம் மட்டுமே இருக்கும் என சுற்றுச்சுழல் பாதுகாப்பு விதி கூறி உள்ளது.
எனவே இந்த பட்டாசு வெடிப்பதற்கான தடை முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். அத்துடன் சட்டவிரோதமாக விற்கப்படும் சீன பட்டாசுகளை முழுமையாகத் தடை செய்ய அரசு மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பட்டாசுகள் பல பேன்சி ஸ்டோர்கள் மற்றும் பரிசுப் பொருள் அங்காடிகளில் விற்கப்படுகின்றன. இதை நிறுத்த அரசு தடை செய்யப்பட்ட இந்த சீன பட்டாசு இறக்குமதியைக் கண்காணிக்க வேண்டும் .
நலிந்து வரும் பட்டாசு தொழிலைக் காக்கத் தேவையான தீர்மானங்களை தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும் தற்போது பட்டாசுகளுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதைக் குறைந்த பட்ச ஜிஎஸ்டியான 5%க்கு மாற்ற மத்திய அரசுக்குத் தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.