சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு வரும் 16ந்தேதி தொடங்கவிருந்த நிலையில், அது தள்ளிப்போகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. இதற்கிடையில் வரும் 18ந்தேதி பொறியியல் படிப்பில் புதிய பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட உள்ளது.

பொறியியல் கலந்தாய்வு குறித்து கடந்த ஜூன் மாதம் 8ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அன்றைய தினம்  பொறியியல் கலந்தாய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி,  2022 -23 பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் மற்றும் கலந்தாய்வுக்கான அட்டவணையை வெளியிட்டார். அதன்படி,  20-06-2022 முதல் பொறியியல் விண்ணப்பம் தொடங்கி 19-07-2022 அன்று முடிவடைந்தது. பின்னர், சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவு வெளியாக தாமதமானால், பொறியியல் படிப்பு உள்பட கல்லூரி படிப்புக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

அத்துடன், பொறியியல் சிறப்பு கலந்தாய்வு ( மாற்றுத்திறனாளிகள் கலந்தாய்வு, விளையாட்டு வீரர்களின் வாரிசுகள், ராணுவ இடஒதுக்கீடு ) – 16-08-2022 முதல் 18-08-2022 வரையிலும், பொது கலந்தாய்வு – 22-08-2022 முதல்  14-10-2022 வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

மேலும்,  துணை கலந்தாய்வு – 15-10-2022 முதல் 16-10-2022 வரை. SC மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு 17-10-2022 முதல் 18-10-2022 வரை என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆகஸ்ட் 16 முதல் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு நடைபெறுதில் சந்தேகம் எழுந்துள்ளது. நீட் தேர்வு முடிவு வெளியிட்ட பிறகு கலந்தாய்வு நடத்தலாம் என உயர்அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும், அதனால்,  கலந்தாய்வு தொடங்கும் தேதி தள்ளிப்போக உள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலில், பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வரும் 18ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  வரும் 12ம் தேதி நடைபெறும் பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டம் நடைபெற இருப்பதாகவும், இந்த கூட்டத்தில் புதிய பாடத் திட்டத்துக்கு ஒப்புதல் பெறப்படும் என்றும், புதிய பாடத்திட்டமான,  வேலைவாய்ப்பு, தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் பொறியியல் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.