திருச்சி:

‘அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது மானங்கெட்டத்தனமாக தெரியவில்லையா?’ என, தமிழக காங்கிரசின் செயல் தலைவரும், பாமக தலைவர் ராமதாசின் மருமகனும், அன்புமணியின் மைத்துனருமான விஷ்ணுபிரசாத் கடுமையாக சாடி உள்ளார்.

அதிமுக பாமக இடையே நேற்று நாடாளுமன்ற மற்றும் 21 சட்டமன்ற தேர்தலுக் கான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த சில ஆண்டுகளாக அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்த பாமக, எடப்பாடி ஆட்சியை கடுமை யாகவும், மிகவும் கீழ்த்தரமாகவும் விமர்சித்து வந்தது. திராவிட கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என்று ஆணித்தரமாக அறிவித்து வந்த பாமக, நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கட்சியுடன் கைகோர்த்து உள்ளது.

இது கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் குறித்து மிகவும் கேவலமாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருச்சியில் நடைபெற்ற சென்னை கலைஞர் அரங்கில், பாராளுமன்ற தேர்தலுக்கான திருச்சி மண்டல ஆயத்தக் கூட்டம் நேடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக காங்கிரசின் செயல் தலைவரும், அன்புமணியின் மைத்துனருமான விஷ்ணுபிரசாத் பாமகவை கடுமையாக தாக்கினார்.

10 கோரிக்கைகளை வைத்து அதிமுகவுடன் கூட்டணி என்று ராமதாஸ் கூறுகிறார். 11வது கோரிக்கை என்னவென மக்களுக்கு தெரியும். ராமதாஸ் எனக்கு மாமா தான். மானங்கெட்ட எவனாவது திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பானா என காட்டமாக கேள்வி எழுப்பியவர்,  இப்போது எந்த அடிப்படையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

இது மானங்கெட்டத்தனமாக தெரியவில்லையா?. வெட்கம் கெட்டு, மானம் கெட்டு கூட்டணி அமைத்துள்ளனர். கூட்டணி பேரம் நடந்துள்ளது. மாவீரன் குருவை சிறையில் அடைத்ததால் தான் அவர் இறந்தார் என்பதை அனைவரும் அறிவர்.

குருவை சிறையில் அடைத்தவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார் ராமதாஸ். குருவின் ஆன்மா கூட அவர்களை மன்னிக்காது.

ஜாதியை சொல்லிக்கொண்டு ஓட்டுக்கேட்க வருவார்கள். மக்களே அவர்களை விடாதீர்கள். கூட்டணிக்காக ராமதாஸ், சமுதாயத்தை அடகு வைத்துவிட்டார்.

இவ்வாறு அவர் பேசினார்.

விஷ்ணுபிரசாத்தின் தந்தை முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி. இவரது மகளும், விஷ்ணுபிரசாத்தின் உடன் பிறந்த சகோதரியான சவுமியாவை தான் அன்புமணி ராமதாசின் மனைவி.  இந்த நிலையில்,  விஷ்ணுபிரசாத் ராமதாசை விமர்சித்து பேசியிருப்பது அன்புமணி குடும்பத்தில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.