லக்னோ:

டந்த 14ந்தேதி காஷ்மீர் புல்வாமா பயங்கவாத வெடிகுண்டு தாக்குதலில்  வீர மரணம் அடைந்த உ.பி. மாநிலத்தை சேர்ந்த வீரர் சாஹீத் அமித்குமார் வீட்டுக்கு  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேரில் சென்று  அவரது உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினர்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூராவில், பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும்  ஜெய்ஷ் இமுகமது என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த தற்கொலைப்பபடை பயங்கரவாதி  வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது மோதி பயங்கர  தாக்குதல் நடத்தியதில் 44 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், ஏற் படுத்தி உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சமூக சேவை அமைப்புகள் உதவியும் ஆறுதலும் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், உ.பி. மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர், ஷாம்லி பகுதியை சேர்ந்த வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர் சாஹீத் அமித் குமார் கோரி வீட்டிற்கு சென்று அவரது உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும், அமித்குமார் குடும்பத்தினரையே உரையாடி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

ராகுல் மற்றும் பிரியங்காவின் எளிமையான அணுகுமுறை அங்குள்ள மக்களிடையே பெரும் வரவேற்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.