சென்னை: தமிழக கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்பு விதிமுறைகள் வகுப்பது தொடர்பாக 7 பேர் கொண்ட புதிய குழு நியமனம் செய்துள்ளது. இந்த குழுவின் தலைவராக கல்லூரி கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதத்தில் கொரோனா தொற்றின் முதல் அலையின் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. மாணவர்களுக்கான தேர்வுகள் சில இடங்களில் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. சில இடங்களில் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து புதிய கல்வி அமர்வு தொடங்கப்பட்டது. ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வந்ததால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் கற்பிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள போது மாணவர்களுக்கு கற்றல் பணியினை தொடர்வதற்கு ஆன்லைன் வகுப்புகள் உதவியது. தற்போது ஆன்லைன் வகுப்புகளில் சில ஆசிரியர்கள் முறை தவறி நடப்பது தொடர்பாக புகார்கள் எழுந்துள்ளது.
இதனால் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை உருவாக்க 7 பேர் கொண்ட குழு ஒன்றை தமிழக அரசு நியமித்துள்ளது.
கல்லூரி கல்வி இயக்குனர் பூர்ண சந்திரன் இந்த குழுவிற்கு தலைமை தங்குகிறார். கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை இந்த குழு உருவாக்கி வருகிறது. இந்த குழு புதிய விதிமுறைகள் தொடர்பான அறிக்கையை ஜூன் 11ம் தேதி சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.