சென்னை
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாகவும் அதிக நீர் சேமித்து வைக்க கூடாது எனவும் கேரள அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு அணை பலமாக உள்ளதால் நீர் மட்டத்தைக் குறைக்க அவசியம் இல்லை எனக் கூறி வருகிறது. தற்போது கேரளாவில் கடும் வெள்ள பாதிப்புக்கள் ஏற்பட்டதால் அணை விவகாரம் தீவிரமாகி உள்ளது.
இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அதில்,
“கடந்த 10 நாட்களில் கேரளா சந்தித்த வெள்ளம் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழக அரசும், எங்கள் மாநில மக்களும் மிகுந்த கவலை அடைந்தனர். முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்தவரை, நாங்கள் நீர்மட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். எங்கள் தரப்பில் உள்ள அதிகாரிகள் உங்கள் குழுவுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.
இன்று (27.10.2021) காலை 9 மணியளவில் அணையின் நீர்மட்டம் 137.60 அடியாகவும், நீர்வரத்து 2300 கன அடியாகவும் உள்ளது. வைகை அணைக்கு அதிகபட்ச அளவு நீர் பெறப்பட்டு வருகிறது. தற்போதைய நீர்மட்டம், உச்சநீதிமன்ற தீர்ப்பில் அனுமதித்த அளவிற்குள் உள்ளது. தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து, அதற்கேற்ப உபரிநீரை வெளியேற்றி ஒழுங்குபடுத்துமாறு உத்தரவிட்டுள்ளேன். மேலும், நீர் இருப்பு மற்றும் வெளியேற்றம் குறித்த தேவையான அனைத்து தகவல்களையும் முன்கூட்டியே பகிர்ந்து கொள்ளுமாறு அவர்களிடம் கூறி உள்ளேன்.
இதனால் உங்கள் அரசாங்கம் தண்ணீரைத் திறப்பதற்கு முன்பாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடங்க முடியும். இரு மாநிலங்கள் மற்றும் நமது மக்களின் நலன்கள் நன்கு பாதுகாக்கப்படுவதை எனது அரசாங்கம் உறுதி செய்யும் என்பதை மீண்டும் ஒருமுறை உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.