சுப்ரமணியபுரம் படத்தில், ‘மதுர குலுங்க குலுங்க..’ நாடோடிகள் படத்தில், ‘ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா..’ அரசுன் படத்தில், ‘கத்திரி பூவழகி..’  என ஏராளமான ஹிட் பாடல்களைப் பாடியவர் வேல் முருகன்.

இவரது மூத்த மகள் ரக்‌ஷனாவும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

பத்தே வயதான ரக்‌ஷனா ஐந்தாம் வகுப்பு மாணவி ஆவார். ஒரே நிமிடத்தில் 51 பல்கலைக்கழகங்களின் சின்னங்களை அடையாளம் கண்டு புதிய சர்வதேச கின்னஸ் சாதனையை இவர் படைத்துள்ளளார்.

பாகிஸ்தானை சேர்ந்த அஜ்மல் என்பவர் 40 பல்கலைக்கழகங்களின் சின்னங்களை அடையாளம் கண்டது இதற்கு முந்தைய சாதனையாக இருந்த நிலையில், ரக்ஷனா இதை முறியடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தனது தந்தை, தாய் மற்றும் சகோதரியுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் ரக்‌ஷனா இன்று சந்தித்து கின்னஸ் சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார். சிறு வயதிலேயே ரக்‌ஷனா படைத்துள்ள சாதனை குறித்து அறிந்து மகிழ்ச்சி தெரிவித்த முதலமைச்சர், அவரை வெகுவாகப் பாராட்டினார்.

திமுக இளைஞர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு உதயநிதி ஸ்டாலின், சிறு, ஊரக மற்றும் குடிசைத் தொழில்கள் அமைச்சர் திரு தா.மோ. அன்பரசன், சுகாதாரத் துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் மற்றும் பள்ளிக் கல்வி அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரையும் ரக்க்‌ஷனா குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தனது மகளின் சாதனை குறித்து பெருமகிழ்ச்சி தெரிவித்துள்ள பாடகர் வேல்முருகன், ரக்க்‌ஷனாவை மனமார பாராட்டியதற்காக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.