சென்னை

ரும் 2025ஆம் ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழகம் உருவாகும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று உலகெங்கும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் ஸ்டாலின்,

”குழந்தைப் பருவம், ஒவ்வொருவருக்கும் ஏற்படும் மகத்தான வாழ்க்கை நிலை. துள்ளிக் குதிக்கவும், உலகைப் பார்த்து வியக்கவும், ஒவ்வொன்றையும் துருவித் துருவி ஆராயவும், அனைவரும் முயலும் அரிய பருவமே குழந்தைப் பருவம். குழந்தைகளை மிகப் பெரிய பேறு என்று கருதியதால்தான் வள்ளுவர் மழலைகளுக்காக ஓர் அதிகாரத்தையே ஒதுக்கினார். மழலைகளின் குரல்கள் யாழையும், குழலையும் மிஞ்சுவன என்று பாராட்டினார்.

குழந்தைகள் விளையாடியும், கலந்துரையாடியும், கதை பேசியும் களிக்கவேண்டிய பருவத்தில், அவர்களைப் பள்ளிகளிலிருந்து பிரித்தெடுத்து, பட்டறைகளுக்கு அனுப்புவது மாபெரும் குற்றம்; அவர்களின் குழந்தைத் தனத்தைத் திருடும் பாதகம். குழந்தைகள் பள்ளிகளுக்குப் படிப்பதற்கு மட்டும் செல்வதில்லை. சகக் குழந்தைகளோடு பூக்களை ரசிப்பதற்கும், புன்னகைகளைப் படரவிடுவதற்கும், பூமியின் உயிர்த் துடிப்பை உணர்வதற்கும் தான். கற்றுக்கொள்ள மட்டுமல்ல; உற்றுநோக்கவும் பள்ளிகளே அவர்களுக்கு நாற்றங்கால்களாக இருக்கின்றன.

குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, குழந்தைகளின் குழந்தைத்தனத்தைத் திருடி, துடிப்பு மிக்க அவர்கள் பார்வையை மங்கியதாக மாற்றி, துள்ளுகின்ற அவர்களைத் துவள்கிறவர்களாக்கி, பாடத்தை ஏந்த வேண்டிய அவர்கள் கைகளில், பணிக் கருவிகளைத் தாங்கும் சூழ்நிலையை உருவாக்கி, அவர்கள் சிறகுகளைக் கத்தரித்து, பணியிடம் என்கின்ற சிறையில் அடைப்பது மிகப் பெரிய கொடுமை.

குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றுவது அவர்களுக்கு அளிக்கப்படுகிற மிகப் பெரிய விடுதலை, வாழ்நாள் பரிசு. தமிழக அரசு அதனைத் தன் தலையாய கடமையாகக் கருதி, விழிப்புணர்வை விதைத்துக் கொண்டு வருகிறது. மாபெரும் இயக்கமாக இது ஓங்கி வளர்ந்திருப்பதால், குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் தமிழகம் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக முன்னேறியிருக்கிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டுமென்பதே அரசின் இலக்கு.”

எனத் தெரிவித்துள்ளார்.