சென்னை

சென்னை கொளத்தூர் பகுதியில் 33 திட்ட பணிகளுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டி உள்ளார்,

நேற்று சென்னையில் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் திரு.வி.க. நகர், பல்லவன் சாலையில் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் பார்வையாளர் மாடம், நடைபாதை, இறகுப்பந்து கூடம், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள செயற்கை புல் தரையுடன் கூடிய கால்பந்து விளையாட்டு திடலைத் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, திரு.வி.க நகர் 8-வது தெருவில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 54 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி சிறுவர் பூங்காவைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் திறந்து வைத்தார்.

மேலும் அகஸ்தியர் அறக்கட்டளை சார்பில் கலைஞர் நூற்றாண்டு கட்டணமில்லா உயர் சிகிச்சை வசதிகளுடன் கூடிய கண் சிகிச்சை மையத்தையும், அக்கட்டிடத்தின் முதல் தளத்தில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் தையல் பயிற்சி மையத்தையும் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

பிறகு முதல்வர் மு க ஸ்டாலின் திரு.வி.க. நகர் பிரதான சாலையில் அமைந்துள்ள பெண்கள் உடற்பயிற்சி கட்டிடத்தை 17 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, எல்.சி.1 பூங்காவில் 37 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக மழைநீர் சேகரிக்கும் குளம் அமைத்தல் மற்றும் செயற்கை நீரூற்று, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் அமைக்கும் பணி உள்பட 33 பணிகளுக்கு மொத்தம் 5 கோடியே 94 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்.பி, கிரிராஜன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, அ. வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், துணை மேயர் மகேஷ்குமார், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ரங்கநாதன், மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன், நகர் ஊரமைப்பு இயக்குநர் பி.கணேசன் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.