மதுரை பந்தல்குடி கால்வாய் குறித்து சர்ச்சை எழுந்ததை அடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அங்கு நேரில் ஆய்வு செய்தார்.

மதுரையில் இன்று நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்திற்காக நேற்று மதுரை சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

திமுக முன்னாள் அமைச்சரும் ஸ்டாலினின் சகோதரருமான மு.க. அழகிரியை சந்திக்கச் சென்ற ஸ்டாலினுக்கு செங்கோல் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று மாலை தனது பிரம்மாணட ரோடு ஷோ-வை வில்லாபுரத்தில் இருந்து துவங்கிய முதல்வர் ஸ்டாலின், ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர், சுந்தரராஜபுரம் மார்க்கெட், டி.வி.எஸ் நகர் சுரங்க பாதை வழியாக பழங்காநத்தம், வ.உ.சிதம்பரனார் பாலம், எல்லீஸ் நகர் 70 அடி ரோடு, பைபாஸ் ரோடு, பொன்மேனி, காளவாசல், குரு தியேட்டர், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், ஜல்லிக்கட்டு ரவுண்டனா, ஆரப்பாளையம் குறுக்கு சாலை வழியாக சென்றார்.

பின்னர், புதிதாக அமைக்கப்பட்ட முன்னாள் மேயர் முத்துவின் வெண்கல சிலையை திறந்து வைத்தார் சுமார் 25 கி.மீ. தூரம் நடைபெற்ற இந்த ரோடு ஷோ-வில் வழியெங்கும் திரளான மக்கள் ஸ்டாலினுடன் நடைப்பயணத்தில் கலந்துகொண்டு அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

அதேவேளையில், ஸ்டாலின் செல்லும் பாதையில் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பந்தல்குடி பகுதியில் உள்ள முக்கிய கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் அவல நிலையில் இருந்ததாகவும் ரோடு ஷோ-வின் போது முதல்வர் அதை பார்க்காத வகையில் அதனை திரைசீலையிட்டு மறைத்ததாகவும் சமூக வலைத்தளங்களில் புகார் எழுந்தது.

இந்த நிலையில் அந்த வழியாக சென்ற முதல்வர் ஸ்டாலின், வாகனத்தில் இருந்து இறங்கி கால்வாயை ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது மதுரை ஆட்சியர், அமைச்சர்கள் மற்றும் மேயர் ஆகியோர் உடனிருந்தனர். தூய்மைப் பணிகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்த அவர் அந்தக் கால்வாயை சிறந்த முறையில் பராமரிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.