சென்னை:
ள்ளிக் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மருத்துவ வல்லுநர்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது:-

அன்பார்ந்த மக்கள் அனைவருக்கும் வணக்கம். கொரோனா என்னும் பெருந்தொற்றில் இருந்து மீண்டு வருகிறோம். கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து விட்டது. இந்த பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசு போடப்பட்ட முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை தங்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பயணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாள் ஒன்றுக்கு 36,000-ஐ தொட்ட கொரோனா பாதிப்பு இப்போது 4,000-க்கும் கீழே குறைந்து விட்டது. முழு ஊரடங்கு, மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, மாநிலத்தின் மருத்துவ கட்டமைப்பு மற்றும் துடிப்பான நிர்வாகம் ஆகிய வற்றின் காரணமாகத்தான் இந்த அளவுக்கு நாம் வெற்றியை பெற முடிந்தது. இன்றைய தகவலின் அடிப்படையில் ஏராளமான படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது. ஆக்சிஜன் படுக்கைகள், தீவிர சிகிச்சை படுக்கைகள் ஏராளமாக காலியாக இருக்கின்றன.

எந்த அலையையும் தாங்குகிற வல்லமை இந்த அரசுக்கு உண்டு.அந்த நம்பிக்கை தமிழ்நாடு மக்களுக்கும் உண்டு என்பதை அறிவேன். நான் இப்போது மக்கள்கிட்ட சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். நாம் கொரோனாவை கட்டுப்படுத்தி விட்டோம். ஆனால் கொரோனாவை முழுமையாக ஒழித்து விட்டோம் என்று நம்மால் சொல்ல முடியாது. எனவே மக்கள் யாரும் அலட்சியமாக இருந்து விடக் கூடாது. தளர்வுகள் அறிவிச்சிட்டாங்க அதனால் நாம எந்த விதிமுறையும் பின்பற்ற தேவையில்லை என்று யாரும் நினைக்க கூடாது.

இன்னும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. அரசியல் மற்றும் சமுதாய விழாக்கள் அனுமதிக்கப்படவில்லை. திரையரங்குகள், பூங்காக்கள் திறக்கப்படவில்லை. இதுக்கு என்ன காரணம் என்பதை உணர்ந்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உணவகம், கடைகள் மற்றும் முக்கிய சேவைகள், பொது போக்குவரத்து, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு அனுமதி தந்ததற்கு காரணம் மக்களின் வாழ்வாதாரத்தின் மீதுள்ள அக்கறையால்தான்.

முழு ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அவசியமான பொருளை கூட வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. இதேபோல் மாநிலத்தின் பொருளாதாரமும் சுணக்கம் அடைகிறது. இந்த மூன்று காரணத்திற்காகத்தான் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. கொரோனாவை வெல்வதற்கு தடுப்பூசிதான் மிகப்பெரிய ஆயுதமும், கேடயமும் ஆகும். தமிழ்நாடு மக்களுக்கு இன்னும் முழுமையாக தடுப்பூசி போட்டு முடிக்கவில்லை.

ஒன்றிய அரசும் நமக்கு முழுமையாயாக தடுப்பூசி வழங்கவில்லை. பள்ளி பிள்ளைகளுக்கு இன்னும் தடுப்பூசி போடுவது குறித்து மருத்துவ வல்லுநர்கள் முடிவு எடுக்கவில்லை. குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. முழுமையாக தடுப்பூசிகள் கிடைக்காத நிலையில் மக்கள் இன்னும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மக்கள் அனைவரும் தங்களுக்கு தாங்களே சுய கட்டுப்பாடு விதித்துக் கொள்ள வேண்டும்.

அவசியம் காரணமாக மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள். வீட்டை விட்டு வரும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் இரண்டு முகக்கவசங்ககளை கூட பயன்படுத்தலாம். கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள், அலுவலகங்களில் பணியாற்றும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.

கடைகளின் நுழைவு வாயிலில் கிருமி நாசினி திரவம் வைக்க வேண்டும். உடல் வெப்ப நிலை அறியும் கருவி மூலம் அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். கட்டுப்பாடுகள் தங்களுக்கு தாங்களே சுய கட்டுப்பாடுக்கு மாற வேண்டும். தளர்வுகளின்போது கட்டுப்பாடுகளை மீறினால்தான் மூன்றாவது அலை வரும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். கட்டுப்பாடுகளை நாம் ஒழுங்காக கடைபிடித்தால் எந்த அலையும் உள்ளே வர முடியாது. விதிகளை மீறாதீர்கள். நம்மையும் காப்போம். மக்களையும் காப்போம். நாட்டையும் காப்போம். நன்றி வணக்கம்.