“கிழக்கின் ட்ராய்” என்று பிரபலமாக அழைக்கப்படும் செஞ்சி கோட்டை, இந்தியாவின் மராட்டிய இராணுவ நிலப்பரப்புகளின் ஒரு பகுதியாக UNESCO உலக பாரம்பரிய தளமாக பொறிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செஞ்சி கோட்டை தமிழ்நாட்டில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோட்டை. இது விழுப்புரம் மாவட்டத்தில், சென்னையிலிருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மூன்று மலைகளை உள்ளடக்கிய இந்த கோட்டை, முக்கோண வடிவில் கட்டப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி, ராஜகிரி மற்றும் சஹ்லிதுர்க் என மூன்று மலைகளை இணைத்து இந்த கோட்டை அமைந்துள்ளது. சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள், முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் என பல ஆட்சியாளர்களின் கீழ் இந்த கோட்டை இருந்துள்ளது.

இந்த கோட்டையின் கட்டிடக்கலை மிகவும் சிறப்பானது. 12 கிலோமீட்டர் நீளமுள்ள மதில் சுவர்கள் இந்த கோட்டையை சுற்றி அமைந்துள்ளது. இதில் கோயில்கள், அரண்மனைகள், தானியக் கிடங்குகள் மற்றும் பல கட்டமைப்புகள் உள்ளன.

கோட்டைக்குள் பழைய நகரம் ஒன்று உள்ளது. இது அக்கால மக்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிப்பதாக உள்ளது.

பல போர்களை சந்தித்து, இன்னமும் கம்பீரமாக காட்சி தரும் செஞ்சி கோட்டையை UNESCO உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது இது தமிழ்நாட்டில் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற ஆறாவது இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “சிறந்து நிற்கும் சோழர் கோயில்கள், மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச்சின்னங்கள், நீலகிரி மலை ரயில் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளை அடுத்து இந்த கம்பீரமான மலைக்கோட்டை இப்போது தமிழ்நாட்டின் பெருமைமிக்க UNESCO தளங்களின் பட்டியலில் இணைகிறது

இது தமிழ்நாட்டிற்கும் அதன் நீடித்த கலாச்சார பாரம்பரியத்திற்கும் ஒரு பெருமைமிக்க தருணம்” என்று பதிவிட்டுள்ளார்.

உலக பாரம்பரிய சின்னத்திற்கான அனைத்து சிறப்புகளும் செஞ்சி கோட்டைக்கு உள்ளது UNESCO குழு… அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்