சென்னை

ர்நாடகாவில் கட்டப்பட உள்ள மேகதாது அணை குறித்து விவாதிக்க நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.  அணை கட்டி முடிக்கப்பட்டால், தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு வெகுவாக குறையும். எனவே அணைக் கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு டில்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து பேசினார்.

மத்திய அரசு தமிழக அரசிடம் தெரிவிக்காமல் கர்நாடகாவுக்கு மேகதாது அணை கட்ட அனுமதி வழங்காது என்று உறுதிமொழி வழங்கப்பட்டது. ஆயினும் கர்நாடக அரசு தொடர்ந்து மேகதாது அணைக் கட்டும் நடவடிக்கையில் முனைப்புக் காட்டி வருகிறது. இது குறித்து பிரதமர் மோடியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து, மேகதாது அணை பிரச்சினை குறித்து விரிவான வகையில் விளக்கினார்.

அப்போது அவர், ‘”பெங்களூரு குடிநீர்த் தேவைக்காக இந்த அணை கட்டப்படுகிறது என்ற கர்நாடக அரசின் விளக்கம் ஏற்புடையது அல்ல. இத்திட்டத்தால் தமிழக விவசாயிகளின் நலன் மிகவும் பாதிக்கப்படும்.  ஆகவே தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்ற அனுமதிக்கக் கூடாது’ என பிரதமரிடம் வலியுறுத்தினார்.

ஏற்கனவே ‘மேகதாது அணை அமைக்கத் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது’ என கோரி கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியபோது, ‘இந்த அணை கட்டுவதால், தமிழ்நாடு விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் என்றும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இது எதிராக அமையும் என்றும் திட்டவட்டமாக விளக்கி, இந்த அணை அமைந்திட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது’ என உறுதிப்படத் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்வருக்குப் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

நாளை மேகதாது அணை பிரச்சினை குறித்து விரிவாக ஆலோசிக்க முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது.  தமிழக விவசாயிகளின் நலனைக் காக்கத் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரின் ஒருமித்த எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில், மேகதாது அணை பிரச்சினை குறித்துக் கலந்தாலோசிக்க, தமிழகத்திலுள்ள அனைத்து சட்டமன்றக் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு முதல்வர் தலைமையில், நாளை (திங்கட்கிழமை) காலை 10.30 மணியளவில், தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற உள்ளது.