டில்லி
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு மு க ஸ்டாலின் இன்று முதல் முறையாகக் குடியரசுத் தலைவரை சந்தித்துள்ளார்.
தமிழக முதல்வராகப் பதவி ஏற்ற மு க ஸ்டாலின் ஏற்கனவே ஒரு நாள் சுற்றுப் பயணமாக டில்லி சென்றிருந்தார். அப்போது அவர் பிரதமர் மோடியை மட்டும் சந்தித்தார். கொரோனா பரவல் அப்போது தீவிரமாக இருந்ததால் அப்போது குடியரசுத் தலைவர் யாரையும் சந்திக்காமல் இருந்தார். எனவே மு க ஸ்டாலினால் அவரை சந்திக்க முடியவில்லை.
கொரோனா தீவிரம் குறைந்துள்ளதால் இன்று டில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சந்தித்துள்ளார். இன்று மதியம் 12.10 மணிக்கு இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்ததாக கூறப்பட்டாலும் ஏழு பேர் விடுதலை,, நீட் தேர்வு, மேகதாது அணை உள்ளிட்டவை கு|றித்து பேசியதாகத் தெரிய வந்துள்ளது.
மேகதாது அணை கட்டுமானத்தில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகையில் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழு டில்லி சென்று இது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் முறையிட்டுள்ளது. தற்போது இது குறித்து முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவரிடம் பேசி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.