காஞ்சிபுரம்:

நேற்று மாலை காஞ்சிபுரம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு அத்திரவரதரை பயபக்தி யுடன் தரிசனம் செய்தார்.

40ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதரை தரிசிக்க தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் வருகை தருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்திருந்த நிலையில், கடந்த வாரம் நெரிசலில் சிக்கி 5 பேர் பலியானார்கள்.

இதையடுத்து, மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டு உள்ளன. இதையடுத்து காஞ்சிபுரம் வருகை தந்த முதல்வர்,  ஓரிக்கை பகுதியில் உள்ள தற்காலிக பேருந்து நிலையம், பெரியார் நகர் பகுதிகளில் வாகன நிறுத்தும் இடம் மற்றும் நான்கு மாட வீதியில் பொதுமக்கள் வரிசையில் நிற்கும் இடங்களில் ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து, பக்தர்களின் தேவைக்கேற்ப  கழிவறை  குடிநீர் டேங்குகள் ஆகியவற்றை அதிகப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர்  கோவிலுக்கு சென்ற முதலமைச்சர் அத்திவரதரை பயபக்தியுடன் தரிசனம் செய்தார்.  அவருக்கு அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினர்.

இதையடுத்து  செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி,  அத்திவரதரை பக்தர்கள் தரிசிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசித்திருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.