சென்னை:
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற முதலாவது உலக தொழில்முனைவோர் மாநாட்டில், மோட்டார் வாகன உற்பத்தியில் புதிய தொழில் நுட்பத்தின் மூலம் வர்த்தகத்தை பெருக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் 28 ஏக்கரில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
அந்த இடத்தில் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், போர்டு நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மைக்கேல் பிரல்மெயர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.