சென்னை
நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குடலிறக்க சிகிச்சை முடிந்து இன்று காலை வீடு திரும்பி உள்ளார்.
சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று திடீர் என அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தி மாநிலம் எங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு அவருக்குக் குடலிறக்க நோய் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் தகவல்கள் வந்தன.
நேற்று அவருக்குக் குடலிறக்க நோய்க்கான அறுவை சிகிச்சை நடந்தது. அதற்கு முன்பு நடந்த பரிசோதனையில் முதல்வருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு நடந்த குடலிறக்க அறுவை சிகிச்சை முடிவடைந்து அவர் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி உள்ளார். அவர் 3 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அவர் மருத்துவமனையில் நடந்து சென்று தனது காரில் ஏறி உள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.