துரை

மூத்த தமிழ் அறிஞர் இளங்குமரனார் மறைவுக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல்  தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் வாழந்தான்புரம் கிராமத்தில் 1927 ஆம் வருடம் மூத்த தமிழ் அறிஞர் இளங்குமரனார் பிறந்தார்  இவர்  இளம் வயதிலேயே சொந்தமாகப் பாடல் இயற்றும் அளவுக்குத் தமிழ் ஆர்வமும், புலமைத்திறனும் பெற்றவர் ஆவார்  இவருக்கு 19 வயதிலேயே  சங்கரன்கோவில் அருகில் உள்ள கரிவலம்வந்தநல்லூர் பள்ளியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது.

அதன் பிறகு முறைப்படி புலவர் படிப்புக்கான தேர்வு எழுதி, 1951ல் சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் வெற்றிபெற்றார். காலத்தால் செல்லரித்துப்போன குண்டலகேசி காப்பியத்தை தன்னுடைய கற்பனைத் திறனாலும், கவிதை இயற்றும் ஆர்வத்தாலும் முழுமை செய்தவர். அந்நூலினை 1958-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார்.

இவர் காரைக்குடி அருகே உள்ள திருக்கோவிலூர் மடம் சார்பில், சங்க இலக்கிய வரிசை நூல்களைத் தொகுக்கும் பணி நடைபெற்றபோது அதில் புறநானூற்றை எளிய தமிழில் yஉள்ளார். இத் தொகுப்பு நூலை 2003ம் ஆண்டு அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வெளியிட்டார். இவரது நூல்கள் பலவற்றை மதுரை பாரதி புத்தக நிலையமும் வெளியிட்டுள்ளது.

சுமார் 94 வயதாகும் இளங்குமரனார் நேற்று இரவு வயது மூப்பு காரணமாகக் காலமானார்.  அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை 4 மணிக்கு மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. அவருக்கு இரு மகன்கள் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.  இவரது பேத்தி முத்தரசி ஐ பி எஸ் அதிகாரி ஆவார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், “தமிழையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த முதுபெரும் அறிஞரான இளங்குமரனார் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழகத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்”. எனத் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.