சென்னை

ரபிக் கடலில் உருவாகி உள்ள தவ்தே புயல் தமிழகத்தைத் தாக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளார்.

அரபிக் கடலில் உருவாகி உள்ள தவ் தே புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.  இதைய்டொட்டி முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.  இன்று காலை வினாடிக்கு 1388 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது.  அணையில் இருந்து தற்போது விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

இதைப் போல் வைகை அணையிலும் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.  கோவை உள்ளிட்ட நகரங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.   கோவையின் சில பகுதிகளில் இந்த மழையையும் மீறி மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள காத்திருக்கும் செய்திகளும் வெளியாகின.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் மற்றும் பேரிடர் மேலாண்மை இயக்கினர் அதுல்யா மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தவ்தே புயலின் வேகம், நகர்வு குறித்து வானிலை மைய தலைவர் பாலச்சந்திரனிடம் பல விளக்கங்களை முதல்வர் கேட்டறிந்தார். அப்போது மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.   அதிகாரிகளை எச்சரிக்கையுடன் இருக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.