சென்னை

மிழகத்துக்கு நீட் தேர்வு விலக்கு,  6 மாவட்டங்களில் மருத்துவமனை அமைப்பு ஆகியவை கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சரிடம் மனு அளித்துள்ளார்.

நேற்று தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளைப் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.  இதையொட்டி மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா சென்னை வந்தார்.   இதையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் பங்கேற்றார்.  அப்போது  அவரிடம் முதல்வர் மு க ஸ்டாலின் ஒரு மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில்,

“நீட் தேர்வால்  ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதைக் கருத்தில்கொண்டு மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வைத் தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது.  ஏற்கனவே நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்க அளிக்கப்பட்டால், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே எம்பிபிஎஸ், பல் மருத்துவம், ஆயுஷ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

சுமார் 2 ஆண்டுகள் ஆகியும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டி சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. உடனடியாக இந்த திட்டத்தைச் செயல்படுத்த அர்ப்பணிப்புள்ள அதிகாரிகள் குழுவை அமைத்து, போதிய நிதி ஒதுக்கீடு செய்து, விரைவில் பணிகளைத் தொடங்க வேண்டும்.

அதிகம் கிராமங்கள் நிறைந்த ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், தென்காசி, மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களிலும் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதியும், நிதியும் அளிக்க வேண்டும்.

கோயம்புத்தூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும். தமிழக அரசு இதற்கான இடம் உள்ளிட்டவற்றை வழங்கும்.

முழுவதும் மாநில அரசின் நிதியில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளான டி.எம். மற்றும் எம்.சிஎச் போன்றவற்றில் மாணவர் சேர்க்கை இடங்களில் 50 சதவீதம் இடங்களை, பணியில் இருக்கும் தமிழக மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 7 மாவட்ட தலைமை மருத்துவமனைகளை வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோர் பயிற்சி பெறும் வகையில் அங்கீகரிக்க வேண்டும்.  தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை 7.5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

தமிழக  மருத்துவமனைகளுக்குத் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் மத்திய அரசின் ஒதுக்கீட்டை 20 சதவீதம் உயர்த்த வேண்டும்.

தமிழக அரசு சார்பில் மத்திய அரசு வெளியிட்டுள்ள முதுநிலை மருத்துவக் கல்வி வரைவு விதிகளுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறோம். இதில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும்.

மத்திய அரசு தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில், மாவட்ட தலைமை மருத்துவமனைகளை உருவாக்க ரூ.950 கோடி நிதிக்கான ஒப்புதலை அளிக்க வேண்டும்.”

எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.