சென்னை

சும்பொன்னில் அமைந்துள்ள முத்ஹ்டுராமலிங்க தேவர் நினைவிடத்தில் 2 மண்டபக்கள் அமைக்கப்பட உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தின் முகப்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக மரியாதை செலுத்தும் வகையில் ரூ.1,42,80,000 மதிப்பீட்டில் ஒரு மண்டபமும், மிக முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்தும் பாதையில் ரூ.12,54,000 மதிப்பீட்டில் மற்றொரு மண்டபமும் தமிழ்கஅரசால் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,-

”தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வீர முழக்கம் இட்ட சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் தேவர் திருமகனார் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த ஜமீன் குடும்பத்தில், 1908-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30-ஆம் நாள் பிறந்தார். பள்ளிப்படிப்பினை மட்டுமே முடித்திருந்தாலும், அன்னிய நாட்டினால் அடிமைப்பட்டிருந்த அடித்தள மக்களின் அன்றாட வாழ்க்கையே போராட்டமாக இருந்ததைக் கண்ணுற்ற தேவர் பெருமகனார், அம்மக்களின் வாழ்வு மேம்பட தன்னையே அர்ப்பணித்தார்.

முத்துராமலிங்கதேவர் ஜெயந்தி விழாவின்போது, கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாத்திட, ஒரு நிரந்தர மண்டபம் அமைத்து தர வலியுறுத்தி அரசுக்கு பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை அளித்து வருகின்றனர்.

எனவே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தின் முகப்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக அஞ்சலி செலுத்தும் வகையில் 1 கோடியே 42 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு மண்டபமும், மிக முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்தும் பாதையில் 12 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மற்றொரு மண்டபமும், ஆக மொத்தம் 1 கோடியே 55 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு மண்டபங்கள் தமிழக அரசால் அமைத்திட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.” 

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.