சென்னை,
மிழகத்தின் 3 தொகுதிகள் மற்றும் புதுவையில் ஒரு தொகுதி ஆகிய 4 தொகுதிகளிலும் இன்று மாலை 5 மணியுடன்  பிரசாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலின்போது,  அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய தொகுதிகளில் ஓட்டுக்கு பணப்பட்டுவாடா செய்தது தெரியவந்ததால், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் சீனிவேல் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதியும் காலியாக இருந்தது.
அதேபோல் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ததையடுத்து அந்த தொகுதிக்கும் தேர்தல் நடத்த வேண்டியிருந்தது.
votie-machine2
இந்த 4 தொகுதிகளுக்கும் வருகிற 19-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. தமிழகத்தின் 3 தொகுதிகளிலும்  5 முனை போட்டி நிலவுகிறது.
அரவக்குறிச்சி தொகுதி:
.அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி (அ.தி.மு.க.), கே.சி.பழனிசாமி (தி.மு.க.), பிரபு (பா.ஜனதா), முத்து (தே.மு.தி.க.), பாஸ்கரன் (பா.ம.க.) மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 39 பேர் களத்தில் உள்ளனர்.
அ.தி.மு.க.-தி.மு.க. இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது
அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து  அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும், அதிமுகவை சேர்ந்த நடிகர், நடிகைகளும் பிரசாரம் செய்தனர்.
தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து  கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும், மு.க.ஸ்டாலின்  ஆதரவு திரட்டினர்.
பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் எம்.பி., எச்.ராஜா, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.
தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து, விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தனர்.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் போட்டியிடும்  பா.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் பிரசாரம் மேற்கொண்டனர்.
இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு பெற்றது.
அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி அரவக்குறிச்சி பஸ் நிலையம் அருகிலும்,  தி.மு.க. வேட்பாளர் கே.சி.பழனிசாமி பள்ளப்பட்டியிலும்,  பா.ம.க. வேட்பாளர் பாஸ்கரன் ஈசநத்தம் பகுதியிலும்  இன்று மாலை பிரசாரத்தை நிறைவு செய்தனர்.
இதன் மூலம் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நடந்துவந்த அனல் பறக்கும் பிரசாரம் இன்று ஓய்ந்தது.
தஞ்சாவூர் தொகுதி
தஞ்சை தொகுதியில் அ.தி.மு.க. – தி.மு.க. பாரதீய ஜனதா, தே.மு.தி.க., பா.ம.க. கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 14 பேர் போட்டியிடுகிறார்கள்.
வேட்பாளர்களை ஆதரித்து கட்சி நிர்வாகிகளும், கூட்டணி கட்சியினரும் பிரசாரம் செய்தனர். அதிமுக அமைச்சர்கள்,கட்சியின் முன்னணியினர் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து  தீவிர பிரசாரம் செய்தனர்.
தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் நேற்றும், இன்றும்  தஞ்சையில் பிரசாரம் செய்தார். இன்று மாலை 4 மணியளவில் அவர் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை பகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தார்..
தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் தஞ்சையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சி தலைவர் ஜி.கே.மணியும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் ஆகியோர் இன்று இறுதிகட்ட பிரசாரம் செய்தனர்.
votie-machine
திருப்பரங்குன்றம் தொகுதி
திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., பாரதீய ஜனதா, நாம் தமிழர் கட்சி, உள்பட 28 பேர் போட்டியிடுகின்றனர்.
இதில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.விற்கு இடையே  கடும் போட்டி நிலவுகிறது. வேட்புமனு தாக்கலை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதிமுக மீண்டும் வெற்றி பெற்ற தொகுதியை பிடிக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.  திரும்பிய திசையெல்லாம் தலைவர்களின் பிரசாரக்குரலே ஒலித்தது.
புதுவை நெல்லித்தோப்பு தொகுதி
புதுவை நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக தற்போதைய முதல்வர் நாராயணசாமி, அ.தி.மு.க. வேட்பாளர் ஓம்சக்தி சேகர் ஆகியோரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
நாராயணசாமியை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் முகுல்வாஷ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஆகியோர் பிரசாரம் செய்தனர்.
அ.தி.மு.க. வேட்பாளர் ஓம்சக்தி சேகரை ஆதரித்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வர் ரங்கசாமி வாக்கு சேகரித்தார். தமிழக அமைச்சர்களும் பிரசாரம் செய்தனர்.
vote4
தேர்தலையொட்டி புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையின் 4 தொகுதிகளிலும் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.
பிரசாரத்திற்கும், தேர்தல் பணிக்கும் வந்திருந்த வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களை  தொகுதியை விட்டு வெளியேறும்படி தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
பிரசாரம் முடிவடைந்ததை தொடர்ந்து  நாளை மறுநாள் (19-ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்று காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இதையொட்டி தேர்தல் நடைபெறும் தொகுதியில் அன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஓட்டு எண்ணிக்கை 22-ந்தேதி நடக்கிறது. அன்று நண்பகலில் முடிவுகள் தெரிய வரும்.