சென்னை: கொரோனாவால் இழந்த பொருளாதாரம் மீண்டபிறகே நிதிச்சீரமைப்பு செய்ய முடியும் என்று கூறிய  நிதியமைச்சர், கொரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகள் காரணமாக நிதிச்சீரமைப்பு செய்வதற்கான காலம் இன்னும் வரவில்லை என்று  பட்ஜெட்டின்போது, நிதிஅமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்த 2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், வரவு செலவு திட்டத்திற்கான நிதி ஆதாரங்கள் குறித்தும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது

இடைக்கால வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூபாய் 2 லட்சத்தி 18 ஆயிரத்து 991.96 கோடி ரூபாயாக உள்ள ஒட்டுமொத்த வரி வருவாய் மதிப்பீடுகளை, 2021-22ம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 495.89 கோடி ரூபாயாக குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மொத்த வருவாய் வரவுகளில் மாநில அரசின் சொந்த வரி வருவாய் பெரும்பகுதியாக உள்ளது.

இடைக்கால வரவு-செலவுத்திட்ட மதிப்பீடுகளில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 641.78 கோடி ரூபாயாக இருந்த மாநிலத்தின் சொந்த வரி வருவாய் மதிப்பீடுகள், 2021-22ம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 644.15 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021-22-ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் 14 ஆயிரத்து 139.01 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள வரி அல்லாத வருவாய், கொரோனா காரணமாக 2021-22-ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளை காட்டிலும் சற்றுக்குறைவாக உள்ளது.

2021-22-ஆம் ஆண்டு திருத்த வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகளில், ஒட்டுமொத்த வருவாய் செலவினங்கள் 2 லட்சத்து 61 ஆயிரத்து 188.57 கோடி ரூபாயாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்றின் அடுத்தடுத்த அலைகளின் தாக்கத்தில் இருந்து மாநிலத்தின் பொருளாதாரம் இன்னும் முழுமையாக மீண்டு வராத காரணத்தால், நிதிச்சீரமைப்பு செய்வதற்கான காலம் இன்னும் வரவில்லை.

எனவே, 2021-22-ஆம் ஆண்டில் இடைக்கால வரவு- செலவுத்திட்ட மதிப்பீட்டில் 41 ஆயிரத்து 417.30 கோடி ரூபாயாக இருக்கும் என்று தவறாக கணிக்கப்பட்டு வருவாய் பற்றாக்குறை, 2021-22-ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், உண்மையில் 58 ஆயிரத்து 692.68 கோடி ரூபாயாக உயரும் என்று என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற அசாதாரணமான காலத்தின் காரணமாக வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது எனவும், இனி வரும் காலங்களில் நிதி ஒழுக்கம் மற்றும் நிதி ஒருங்கிணைப்பில், இந்த அரசின் உறுதியை எள்ளளவும் பாதிக்காது என்பதையும் உறுப்பினர்களுக்கு உறுதியளிக்கிறேன்.

மூலதனச் செலவினங்களுக்காக இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 43 ஆயிரத்து 170.61 கோடி ரூபாய் திருத்த வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டில் 42 ஆயிரத்து 180.97 என குறைக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் 2021-22-ஆம் ஆண்டு திருத்த வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நிதிப்பற்றாக்குறை 92 ஆயிரத்து 529.43 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

2021-22-ஆம் ஆண்டிற்கு நிதிப்பற்றாக்குறை, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.33 சதவீதம் என 15-வது நிதிக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஒட்டுமொத்த விதிகளுக்குள் நிதிப்பற்றாக்குறை கட்டுப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.