சென்னை: 

2018-19ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.

பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கல்வித்துறைக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறைக்கு ரு.4,620 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், குமரி, நெல்லை, மதுரை, கோவை அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மாணவ சேர்க்கை இடங்கள் கூடுதலாக 345 இடங்கள் உயர்த்தப்படும், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு பல்கலைக்கழகத்தில் உயிரி இயந்திரவியல் சிறப்பு மையத்துக்கு ரூ.13.12 கோடி ஒதுக்கீடு.

இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கு ரூ.191.18 கோடி ஒதுக்கீடு.

குழந்தைகளுக்கான இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தை செயல்படுத்த ரூ.200.70 கோடி ஒதுக்கீடு.

தமிழகத்தில் உள்ள 100 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் உள்ள பாரம்பரியக் கட்டடங்கள் புதுப்பிக்கப்படும்.