சென்னை

விரைவில் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்படுவார் என மாநில பொதுச் செயலர் கரு. நாகராஜன் கூறி உள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு வரை தமிழிசை சௌந்தரராஜன் தமிழக பாஜக தலைவராகப் பதவி வகித்து வந்தார்.  அவர் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து ஓரிரு மாதங்களில் எல் முருகன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.  அவர் தலைவராக இருந்த போது பாஜகவைத் தமிழகத்தில் பிரபலப்படுத்த பல முயற்சிகள் மேற்கொண்டார்.

கருப்பர் கூட்டம் என்னும் குழு தமிழ்க் கடவுள் முருகனைத் தவறாக விமர்சித்ததாக எழுந்த புகாரில் சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.  ஆயினும் கடவுளைத் தவறாக விமர்சித்ததை எதிர்த்து எல் முருகன் தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடத்தினார்.   அப்போதைய அதிமுக ஆட்சி பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போதும் முருகன் தொடர்ந்து போராட்டத்தை நடத்தினார்.

சமீபத்திய தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட முருகன் திமுகவிடம் தோல்வி அடைந்தார்.  ஆயினும் இன்றைய மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் முருகனுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.  தமிழக பாஜக அலுவலகத்தில் இதைப் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி உள்ளனர்.

இந்த நிகழ்வில் பாஜக மாநில பொதுச் செயலர் கரு நாகராஜன், “மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் எல் முருகனுக்கு அமைச்சரவையில் இடம் அளித்தது  மகிழ்ச்சியை அளிக்கிறது. அதிமுக புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறுவது சரி இல்லை  இரு வருடங்களாக தமிழக பிரதிநிதி இல்லாத குறை இப்போது தீர்ந்துள்ளது.  விரைவில் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார்,” எனத் தெரிவித்துள்ளார்.