பல்லடம்

பிரதமர் மோடியின் கூட்டத்துக்குக் கட்டாய வசூல் செய்யவில்லை என்று தமிழக பாஜக விளக்கம் அளித்துள்ளது.

வரும் 27 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம்,பல்லிடம் அருகே நடைபெற உள்ள பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண்,என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா வில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அங்குப் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

நேற்று பொதுக்கூட்ட மைதான அரங்கில் பா.ஜ.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் உள்பட மாநில, மாவட்ட, மண்டல அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாநில பொதுச் செயலாளரும், பொதுக்கூட்ட பொறுப்பாளருமான ஏ.பி.முருகானந்தம் செய்தியாளர்களிடம்

”இந்த பொதுக்கூட்டத்தில் சுமார் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். கூட்டம் அதிகமாகும் என்ற காரணத்தால் கூடுதல் ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். மிகப்பெரிய அரசியல் எழுச்சியோடு இந்த பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. 27 ஆம் தேதி நடைபெற உள்ள இந்த பொதுக்கூட்டத்தில் சில மாவட்டங்களில் இருந்து பா.ஜ.க. தொண்டர்கள் நடைபயணமாகவும்,மிதிவண்டியிலும்,மாட்டு வண்டி மூலமாகவும் வந்து பங்கேற்க உள்ளனர்.

பா.ஜ.க.வினர் நன்கொடை என்கின்ற பெயரில் கட்டாய வசூல் செய்வதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் செய்தி உண்மை அல்ல . பொதுக்கூட்டத்தை எப்படியெல்லாம் கெடுக்க வேண்டுமோ அதற்கான வேலைகளை காவல்துறையின் மூலமாகவும் அரசு அதிகாரிகள் மூலமாகவும் இது போன்ற பொய் செய்திகளைப் பரப்புகின்றனர்.

பா.ஜ.க.வின் எழுச்சியை அவர்களால் தாங்க முடியவில்லை.மாநாட்டு எண்ணிக்கையை எப்படிக் குறைப்பது, எப்படி பொய்வதுக்குப் போடுவது என ஆளுங்கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். 

இந்தியா முழுவதுமே எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டுமே நன்கொடை பெறுகிறோம். ஆக்கப்பூர்வமான அரசியலை நோக்கிச் சென்று கொண்டுள்ளோம்”.

என்று தெரிவித்தார்.