சென்னை: முழு அடைப்புக்கு அழைப்பு பாஜக மாநில தலைமை அழைப்பு விடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அக்டோபர் 31ந்தேதி பாஜக பந்த் நடத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நவ.1-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
கோவை கார் குண்டுவெடிப்பை கண்டித்து, அக்டோபர் 31ந்தேதி கோவையில் முழு அடைப்பு நடத்தப்படும் என அம்மாவட்ட பாஜக தலைமை 26ந்தேதி அறிவித்தது. கோவை பாஜக அலுவலகத்தில் பாஜக கேரள மாநில பொறுப்பாளர் சிபி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகஅரசின் மெத்தன போக்கையும், தமிழக அரசு பயங்கரவாதத்தை மூடி மறைக்க வேண்டும் என்ற எண்ணத்தை கண்டித் தும் பாஜக கோவை மாநகர மாவட்டம் சார்பில் அக்.31ம் தேதி பந்த் அறிவிக்கப்படுகிறது. அதன்படி அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் நடத்த வேண்டுகோள் விடுக்கிறோம் என்றவர், இந்த பந்திற்கு, பொதுமக்கள், வியாபாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இது போன்ற முழு அடைப்பு போராட்டம் நடத்த கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனைதொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோவையில் முழு அடைப்பு போராட்டம் பாஜக தேசிய செயற்க்குழு உறுப்பினர் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, மாநில தலைமையால் அழைப்பு விடுக்கவில்லை. மாநில பாஜக தலைமை அதை ஆதரிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அக்டோபர் 31-ல் பாஜக பந்த் நடத்தினால், அவர்கள்மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டு, வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்காமல் விசாரணையை நவ.1-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இந்த வழக்கு தொடர்பான மாநில பாஜக தலைமையின் தகவல் மூலம், பாஜகவில் கோஷ்டி மோதல் நடைபெற்று வருவது உறுதியாகி உள்ளது.
கோவை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி 31ந்தேதி பாஜக சார்பில் பந்த் அறிவிப்பு…