சென்னை:
மிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தி.மு.க., அதிமுக இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.  இதன் காரணமாக இடையிடையே சிறிது அமளியும் ஏற்பட்டது.
assembly tamilnadu
சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பி.கே.சேகர்பாபு (தி.மு.க.) பேசும்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை புகழ்ந்து பேசினார்.
இதற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் எதிர்ப்பு தெரிவித்தார். சேகர்பாபுவுக்கு பதில் சொல்ல சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். ஆனால் சபாநாயகர் அவருக்கு அனுமதி கொடுக்காமல் உட்காருங்கள் என்றார். அப்போது சபையில் சில அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்களை பார்த்து சேகர்பாபு கூறுகையில், ‘‘எது பேசினாலும் பதில் சொல்ல நான் தயாராக இருக்கிறேன். அவர்கள் எழுந்து நின்று பேசட்டும்’’ என்றார்.
தொடர்ந்து பேசிய சேகர்பாபு ஒவ்வொரு துறைவாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பற்றியும், அது எந்த அளவு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதையும் எடுத்து கூறினார்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணிப்பயன் கிடைக்கவில்லை என்றும் இதற்காக தொழிலாளர்கள் பல்லவன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதையும் கூறினார்.
இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதில் கூறும் போது, ‘‘அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட ஓய்வூதிய தொகை ரூ.1,446 கோடி. ஆனால் தி.மு.க. ஆட்சியின் போது நிலுவையில் வைத்து சென்ற தொகை ரூ.922.24 கோடி’’ என்றார்.
உடனே சேகர்பாபு கூறுகையில், ‘‘ஓய்வூதிய திட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்த தலைவர் கலைஞர் தான். ஓய்வூதிய பயன் அனைவருக்கும் வழங்கப்பட்டதா இல்லையா என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கே வெளிச்சம்’’ என்றார்.
இதன் பிறகு வீடு கட்டும் திட்டம் பற்றி பேசிய சேகர்பாபு, ‘‘பெரும்பாக்கத்தில் 3 ஆண்டுகளாக கட்டி முடித்த வீடுகளுக்கு இன்னும் ஒருவர் கூட குடிவரவில்லை. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை’’ என்றார்.

அமைச்சர்கள் பன்னீர்செல்வம், செல்லூர் ராஜு, உதயகுமார்
அமைச்சர்கள் பன்னீர்செல்வம், செல்லூர் ராஜு, உதயகுமார்

இதற்கு வீட்டு வசதி துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் விரிவாக பதில் அளித்தார்.‘
அடுத்து சேகர்பாபு பள்ளிக்கல்வித்துறை பற்றி பேசினார். சென்னையில் பெரும் மழை வெள்ள பாதிப்பில் அரசு பள்ளிக்கூடங்கள் நீரில் மூழ்கியதாகவும் அந்த பள்ளிக்கூடங்களுக்கு வெள்ள நிவாரணத்துக்கு ஒதுக்கிய பணத்தை ஒதுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இதற்கு அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், பெஞ்சமின் ஆகியோர் பதில் அளித்தனர். அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி.வேலுமணி, தங்க மணி, ஓ.எஸ்.மணியன் ஆகியோரும் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம் குறித்து விரிவாக  பதில் கூறினார்கள். 3 லட்சம் பசுமை வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பல புள்ளி விவரங்களையும் எடுத்துக் கூறினர்.
மீண்டும் சேகர்பாபு பேசும் போது, ‘‘அரசுப்பள்ளிகளில் 600 தலைமை ஆசிரியர்கள் பணியிடம் காலியாக இருப்பதாகவும், மாவட்ட கல்வி அதிகாரி பதவிகள் 60 காலியாக இருப்பதாகவும், தலைமை ஆசிரியர்களே இதை கூடுதல் பொறுப்பாக கவனிப்பதாகவும் கூறினார்.
இதற்கு அமைச்சர்கள் பெஞ்சமின், கே.சி.வீரமணி ஆகியோர் பதில் கூறினார்கள். அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறும் போது, ‘‘கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கல்வித்துறைக்கு ரூ.99,184 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அளவு நிதி எந்த மாநிலத்திலும் ஒதுக்கவில்லை என்றும், மாணவர் தேர்ச்சி விகிதம், சேர்க்கை விகிதாச்சாரம் தமிழகத்தில் தான் அதிகம் உள்ளது.
அம்மா ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்றார்.
(சேகர்பாபு ஒவ்வொரு துறை பற்றி பேச தொடங்கியதும் அதற்கு அமைச்சர்கள் குறுக்கிட்டு பதில் சொல்வதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். அவ்வப்போது அ.தி.மு.க., தி.மு.க. இரு தரப்பு எம்.எல்.ஏ.க்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்).
தொடர்ந்து சேகர்பாபு பேசும் போது, ‘‘பழனி கோவில், சோளிங்கர் கோவில் ரோப்கார் திட்டம் அந்தரத்தில் உள்ளதாகவும், அறநிலையத்துறை எடுத்துள்ள நடவடிக்கை பற்றியும் கேள்வி எழுப்பினார். அறநிலையத்துறை ஆணையராக இருந்தவர் பணி ஓய்வு பெற்ற பின் மீண்டும் அவருக்கு பணி நீட்டிப்பு செய்யப்படுகிறது. இந்த ஆட்சியில் ஓய்வு பெறுபவர்களே மீண்டும் பணிக்கு வரும் நிலை உள்ளது’’ என்றார்.
அப்போது ஓ.பன்னீர் செல்வம் குறுக்கிட்டு, ‘‘சேகர்பாபு ஒவ்வொரு வி‌ஷயத்தையும் புரட்டி புரட்டி போட்டு பேசுகிறார். பணி நீட்டிப்பு என்பது தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட வில்லையா?  இது  எல்லா  ஆட்சியிலும்  உள்ள   நடைமுறைதான்.
சேகர்பாபு சின்ன விஷயத்தை கூட பெரிதாக்குபவர்.  ஈரை பேன் ஆக்கி பூதாகரமாக ஆக்குகிறவர்’’ என்றார்.
அமைச்சர்கள் ராதாகிருஷ்ணன், வீரமணி, பெஞ்சமின்
அமைச்சர்கள் ராதாகிருஷ்ணன், வீரமணி, பெஞ்சமின்

அப்போது அமைச்சர் செல்லூர் ராஜு எழுந்து,  சேகர்பாபு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த போது சட்டசபையில் என்ன பேசினார் என்பதை அவைக்குறிப்பு புத்தகத்தில் உள்ளவற்றை வாசித்தார்.
2005-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந்தேதி அ.தி.மு.க.வில் இருந்த சேகர்பாபு, மகளிர் சுய உதவிக்குழு பற்றி பேசும் போது, ‘‘புரட்சித் தலைவி அம்மாவை புகழ்ந்து பேசியதுடன் அம்மா  கொண்டு வரும் திட்டமெல்லாம் புதுமையான புரட்சிகரமான திட்டமாக உள்ளது’’ என்று கூறியுள்ளார்.
அதே சேகர் பாபு இன்று எப்படி மாற்றி பேசுகிறார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இங்கிருக்கும் போது ஒரு பேச்சு, அங்கிருக்கும் போது ஒரு பேச்சு. எனவே நாளைக்கு என்ன பேசுவார் என்று தெரியாது. அவர் விசுவாசமாக இருப்பாரா? நாளை அவர் எப்படியோ’’ என்றார்.
(உடனே தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் செல்லூர் ராஜு பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்).
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- சேகர்பாபு அப்போது பேசியதை தவறு என உணர்ந்த காரணத்தால்தான் இன்று எங்களிடம் உள்ளார். அவரது விசுவாசத்தை பற்றி அமைச்சர் சந்தேகப்பட தேவையில்லை. நிச்சயமாக விசுவாசமாகத்தான் இருப்பார்.
அமைச்சர் செல்லூர் ராஜு:- சேகர்பாபு யார் என்று தெரியாத நிலையில் அவருக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தவர் எங்கள் அம்மா. எங்களிடம் இருந்த போது புரட்சித் தலைவி அம்மாவை பற்றி புகழ்ந்து பாராட்டி எத்தனை பக்கம் பேசினார். தெரியுமா? அவரது பேச்சு எல்லாமே பக்கம் பக்கமாக அவைக்குறிப்பில் உள்ளது. அவற்றை யெல்லாம் படித்து சொல்ல நேரம் போதாது. எனவே அவரிடம் நீங்கள் உஷாராக இருப்பது நல்லது.
அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம்:- சேகர்பாபுவுக்கு சான்றிதழ் தந்து எதிர்க்கட்சி தலைவர் பேசுகிறார். இதே அவையில் அவர் எதிர்க்கட்சி தலைவர் (மு.க.ஸ்டாலின்) பற்றி என்ன பேசினார் என்று ஒரே ஒரு உதாரணத்தை சொல்கிறேன்.
சபாநாயகர்:- சேகர்பாபு பேசியதற்கு பதில் சொல்லி அவை முன்னவரை பேச விடுங்கள். ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்.
அவை முன்னவர்  ஓ.பன்னீர்செல்வம்:- 2005-ம் ஆண்டு ராணி மேரி கல்லூரியில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக சேகர் பாபு சட்டசபையில் பேசியதை இப்போது வாசிக்கிறேன். இப்போதைய எதிர்க்கட்சி தலைவர் (மு.க.ஸ்டாலின்) சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையம் அருகே சென்று எங்களை சிறைக்கு அனுப்புங்கள் என்று போலீசாருடன் மல்லுகட்டியதுடன் ஒரு உயர் போலீஸ் அதிகாரியை தனது வலது முழங்கையால் அவரது மார்பில் இடித்து முழு பலத்தோடு அவரை பின்னுக்கு தள்ளினார் என்று சேகர்பாபு பேசியுள்ளார்.
(இதற்கு மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து சேகர் பாபுவின் பேச்சை ஓ.பன்னீர் செல்வம் வாசிக்க கூடாது என்று கூறி தி.மு.க. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்).
சேகர்பாபு, துரைமுருகன், ஸ்டாலின்
சேகர்பாபு, துரைமுருகன், ஸ்டாலின்

துரைமுருகன்:- தி.மு.க.வினர் அங்கு வருவதும் அ.தி.மு.க.வினர் இங்கே வருவதும் வழக்கமாக நடந்து கொண்டிருப்பதுதான். எனவே அப்போது பேசியவற்றை இப்போது எடுத்து சொன்னால் அது ஒரு தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி விடும் என பயப்படுகிறேன்.
தி.மு.க.வில் இருந்து அ.தி.மு.க.வுக்கு சென்றவர்கள் முன்பு என்ன பேசினார்கள் என்பதை எங்களாலும் திருப்பி சொல்ல முடியும். நீங்கள் இப்படி வாசித்தால் காளிமுத்து போன்றவர்கள் பேசியதை நாங்கள் திருப்பி சொல்ல வேண்டியது வரும். இது இந்த அவைக்கு நல்லதல்ல.
நீங்கள் ஓ.பன்னீர்செல்வத்தை பேச அனுமதித்தால் அதே உரிமையை எங்களுக்கும் தர வேண்டும். (இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் பழையவற்றை பேசாமல் அமர்ந்துவிட்டார்).
அமைச்சர் செல்லூர் ராஜு:- நாங்கள் தவறாக அவரை சொல்லவில்லை. நாங்களே ஏமாந்து போய் விட்டோம். எனவே அவரது (சேகர்பாபு) பேச்சை நாங்கள் சீரியசாக எடுக்கவில்லை.
(இதற்கு பதில் சொல்ல சேகர்பாபு வாய்ப்பு கேட்டார். ஆனால் வாய்ப்பு கொடுக்க வில்லை. உடனே தி.மு.க.வினர் பேசவிடு பேசவிடு என்று சபையிலேயே கோ‌ஷ மிட்டனர்).
சபாநாயகர்:- நான் காலையிலேயே சேகர்பாபுவிடம் 20 நிமிடத்துக்கு மேல் பேச முடியாது என்றேன். ஆனால் இப்போது மணி 11.16 ஆகிறது. எவ்வளவு நேரம்தான் பேச அனுமதி கொடுக்க முடியும்.
(தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து சேகர்பாபு பேசுவதற்கு வாய்ப்பு கேட்டனர். அதன் பிறகு சபாநாயகர் சேகர்பாபுவை பேச அனுமதித்தார்).
சேகர்பாபு:- அமைதி, வளம், வளர்ச்சி என இந்த ஆட்சியில் கூறி உள்ளீர்கள். அமைதி பற்றி ஒரு கருத்தை சொல்கிறேன். முதல்-அமைச்சரை நேற்று இசைக்கல்லூரி துணைவேந்தர் வீணை காயத்ரி சென்று பார்த்துள்ளார். இந்த கல்லூரிக்கு வேந்தர் யார் என்றால் முதல்-அமைச்சர்தான். முதல்-அமைச்சர் வேந்தராக உள்ள இசைக்கல்லூரி அலுவலகத்தையே சிலர் சூறையாடி உள்ளனர். அங்குள்ள துணைவேந்தருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதுதான் இன்றைய சட்டம்-ஒழுங்கு.
அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம்:- சேகர்பாபு அங்கு சுற்றி இங்கு சுற்றி கடைசியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு வந்து விட்டார். கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. முதல்-அமைச்சர் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரித்து வருகிறார். தமிழகத்தை அமைதிப்பூங்காவாக நிலைநிறுத்தி உள்ளார்.
(இவ்வாறு சொல்லிவிட்டு குற்றவழக்குகளின் புள்ளி விவரங்களை தெளிவாக பட்டியலிட்டார்.
இவ்வாறு காரசாரமாக விவாதம் நடந்தது.