“படிப்படியாக மதுவிலக்கு என்ற மருந்தை கொடுத்து சரி செய்ய முடியாது; முழு மதுவிலக்கு என்ற அறுவை சிகிச்சையின் மூலம் தான் குணப்படுத்த முடியும். எனவே, மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களையும் காக்க முழு மதுவிலக்கை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்”  என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுறுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப்போவதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ள போதிலும், அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. ஆனால், மது ஆதிக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக பள்ளிக்கூடங்கள் படிப்படியாக குடிப்பகங்களாக மாறுவதற்கான அறிகுறிகளே தெரிகின்றன. வேலூர் மாவட்ட பள்ளிகளில் நடந்த மது விருந்துகள் அதைத்தான் உறுதி செய்கின்றன.
அரக்கோணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 12 பேர் கடந்த 22-ஆம் தேதி பிற்பகலில் மது அருந்திவிட்டு போதையுடன் வகுப்புக்கு வந்திருக்கின்றனர். ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்த போது தேவையில்லாத வினாக்களை அவர்கள் எழுப்பியதைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. அதில் 22ஆம் தேதி ஒரு மாணவனுக்கு பிறந்தநாள் என்பதால் அந்த மாணவன் பள்ளிக்கூடத்திற்கு மது வாங்கி வந்ததும், அதை பள்ளி வளாகத்திலேயே உள்ள பயன்படுத்தப்படாத கட்டிடத்தில் வைத்து 12 மாணவர்கள் குடித்ததும் தெரியவந்திருக்கிறது.
அதேபோல், ஆம்பூரை அடுத்த கரும்பூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நேற்று முன்நாள்  காலை இறைவழிபாடு நடந்து கொண்டிருந்தபோது 9ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் ஆசிரியர்கள் விசாரணை நடத்தினர். அதில் ஒரு மாணவனுக்கு அன்று பிறந்த நாள் என்றும், அதையொட்டி அவன் மது வாங்கி வந்து இறைவழிபாட்டுக்கு முன்பே மற்ற மாணவர்களுக்கு பள்ளியில் விருந்து வைத்ததும் தெரியவந்துள்ளது.
download
வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காகத் தான் படிப்பதற்காக குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புகின்றனர். ஆனால், பள்ளிக்கூடங்களையே குடிப்பகங்களாக மாற்றும் அளவுக்கு  சூழல் நிலவினால் தமிழகத்தின் எதிர்காலமாக பார்க்கப்படும் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும்? என்ற அச்சம் தான் ஏற்படுகிறது. பள்ளிகளில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்று விதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் போதிலும், அதை மதிக்காத தமிழக அரசு பள்ளிக் கட்டிடத்திற்கு அடுத்தக் கட்டிடத்திலேயே மதுக்கடைகளை திறந்து மாணவர்களை சீரழிக்கிறது.
அரக்கோணம் பள்ளியில் மது அருந்திய மாணவர்கள் 12 பேரும் 17 வயதுக்கும் குறைவானவர்கள். ஆம்பூரை அடுத்த கரும்பூர் பள்ளியில் மது அருந்தி மயங்கி விழுந்த மாணவர்கள் 14  வயதுக்கும் குறைவானவர்கள். தமிழ்நாட்டில் மதுவால் ஏற்படும் தீமைகள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பா.ம.க. தொடர்ந்த வழக்கில், 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யப்படாது என்றும்,  இதற்கான அறிவிப்பு பலகை மதுக்கடைகளின் முன்பாக வைக்கப்படும் என்றும் தமிழக அரசு உறுதி அளித்திருந்தது. அதற்கு மாறாக அரக்கோணத்தில் 17 வயது மாணவனுக்கும், ஆம்பூரில் 14 வயது மாணவனுக்கும் மது விற்றவர்கள் யார்? அவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
கரும்பூர் பள்ளியில் 4 மாணவர்களும் மயங்கி விழுந்த போது காலை 9.15 மணி. குறைந்தபட்சம் அதற்கு அரை மணி நேரம் முன்பாகவே அவர்கள் மது அருந்தியிருக்க வேண்டும். படிப்படியாக மது விலக்கை ஏற்படுத்துவதற்காக மதியம் 12.00 மணிக்கு தான் மதுக்கடைகள் திறக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், காலை 8.45 மணிக்கு முன்பாகவே பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மது விற்கப்பட்டது எப்படி? இதற்கு காரணமானோர் மீது அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?
மாணவர்கள் மது அருந்தும் நிகழ்வு தமிழகத்தில் இப்போது தான் முதல்முறையாக நடந்திருக்கிறது என்று கூற முடியாது. பல ஆண்டுகளுக்கு முன்பே திருவாரூரில் மது பாட்டிலை வாங்கி இடுப்பில் செருகிச் சென்ற 9&ஆம் வகுப்பு மாணவன் பாட்டில் வெடித்து உயிரிழந்தான். அதன்பின் கரூரில் மாணவர்கள் மது அருந்தி பேரூந்து நிலையத்தில் மயங்கிக் கிடந்தது, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில்  பள்ளிக்கூட பலகைகளை உடைத்து விறகாக விற்பனை செய்து அந்த பணத்தில் மது அருந்தியது, கோவையில் மாணவிகள் மது போதையில் தகராறு செய்தது என மதுவால் மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிகழ்வுகளை பட்டியலிடலாம். ஆனால், இதைப்பற்றியெல்லாம் அரசு ஒருபோதும் கவலைப்பட்டதில்லை.
தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள் மற்றும் கோவில்களுக்கு அருகில் 1500&க்கும் அதிகமான மதுக்கடைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த மாதம் 500 மதுக்கடைகள் மூடப்பட்ட போது பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகள் மூடப்படவில்லை. இந்த கடைகளை மூடியதால் அரசுக்கு ரூ.1500 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக நிதிநிலை அறிக்கையில் ஆட்சியாளர்கள் அறிவித்திருப்பதால் அடுத்தக்கட்டமாக மதுக்கடைகள் மூடப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
இதேநிலை நீடித்தால் பள்ளிகளில் உணவு இடைவேளையைப் போலவே மது இடைவேளை விட வேண்டிய அவலம் நேரும் ஆபத்து உள்ளது. தமிழகத்தில் மதுவின் தீமைகள் சமுதாயத்தில் புரையோடிவிட்ட நிலையில், படிப்படியாக மதுவிலக்கு என்ற மருந்தை கொடுத்து சரி செய்ய முடியாது; முழு மதுவிலக்கு என்ற அறுவை சிகிச்சையின் மூலம் தான் குணப்படுத்த முடியும். எனவே, மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களையும் காக்க முழு மதுவிலக்கை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.” – இவ்வாறு தனது அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.