தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் லீக், மமக, விசிக இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு முடிவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ், மா.கம்யூனிஸ்டு, மதிமுக கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வந்தது.
இந்த நிலையில், இன்றுமாலை பேச்சுவார்த்தைக்கு வருமான மதிமுவுக்கு, திமுக தலைமை அழைப்பு விடுத்தது. அதைத்தொடர்ந்து, வைகோ தலைமையிலான மதிமுக நிர்வாகிகள், அண்ணாஅறிவாலயம் வந்தனர். அங்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான குழுவினருடன் ஆலோசனை நடத்தினர்.
இதில், திமுக – மதிமுக இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த 6 தொகுதிகளிலும் மதிமுக, திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக சம்மதம் தெரிவித்து உள்ளது.
இதற்கான ஒப்பந்தம் மு க ஸ்டாலின் வைகோ முன்னிலையில் கையெழுத்தானது.
திமுக உடனான முதல்கட்ட பேச்சுவார்த்தையின்போது மதிமுக 12 தொகுதிகளை கேட்ட நிலையில், பின்னர் 8 தொகுதிகளாவது வேண்டும் என வலியுறுத்தியது. அதுபோல, தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் கூறியது. ஆனால், தற்போது 6 தொகுதிகளுக்கும், திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.