சென்னை: ஆளுநர் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பிய மசோதாக்கள் இன்று தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீண்டும் ஆளுநரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் 10 மசோதாக்களை ஆளுநர் கையெழுத்திடாமல் மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. பேரவைத் தலைவர் அப்பாவு உரையுடன் இன்று (நவ. 18) காலை தொடங்கியது.
இதைத்தொடர்ந்து, இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனிதீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார். இதைத்தொடர்ந்து அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் தங்களது கருத்தை பதிவு செய்தனர். பாஜக எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. தீர்மானம் சட்டப்பேரவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர்கள் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துப் பேசினர்.
முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம் சட்டமுன்வடிவுகள் பிரிவு வாரியாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதன்மூலம் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இவை ஆளுநரின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பப்படவுள்ளன.