25 மற்றும் 30 ஆண்டு கால அளவுக்கான தலா 1500 கோடி ரூபாய்க்கான பத்திரங்களை ஏல முறையில் விற்பனை செய்வதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஆண்டு பலன் தரும் 3000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பங்கு பத்திரங்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறது தமிழ்நாடு அரசு, இதற்கான விண்ணப்பம் மத்திய ரிசர்வ் வங்கியின் ஈ-குபேர் ஏல விற்பனை இணையதளத்தில் ஜூன் 1 ல் வெளியிடப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல், நிதி நெருக்கடி என்று பல்வேறு கடும் சிக்கல்களை சந்தித்து வரும் தமிழகத்தை மீட்க மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதுபோன்ற அரசு பத்திரங்கள் இதற்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்தாலும் தற்போதுள்ள சூழலில் தனியார் முதலீடுகளை விட அரசு பத்திரங்களில் முதலீடு செய்வது ஆபத்து இல்லாதது என்பதால் இது நல்ல பலன் தரும் முயற்சி என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மாநில அரசின் உரிமைகளைப் பறித்து அதிகாரம் அனைத்தையும் மத்திய அரசிடம் குவிப்பதை நோக்கமாக கொண்டு செயலாற்றி வருவதாக, மத்திய அரசை இருதினங்களுக்கு முன் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்க பாணியில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில், தமிழ் நாட்டின் பொருளாதார நிலையை சீரமைக்க நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.