ஊரடங்கு காலத்தில் உணவின்றி வீதிகளில் சுற்றித்திரியும் விலங்குகளுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு இணங்க தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

பசுக்கள், நாய்கள், பூனைகள், குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகள் உணவு கிடைக்காமல் வீதிகளில் அல்லல்படும் நிலையை கருத்தில் கொண்டு அவற்றுக்கு உணவு வழங்க நிதி அளிக்குமாறு விலங்குகள் நல வாரியம் கோரிக்கை வைத்துள்ளது.

தொடர் ஊரடங்கு காரணமாக, அவதியுறும் சாலையோர விலங்குகளுக்கு உணவு வழங்குவதற்காக, பிரத்யேக வங்கிக் கணக்கு ஒன்றையும் தொடங்கியுள்ளது.

கணக்கின் பெயர் : Tamil Nadu Animal Welfare Board CSR Funds
கணக்கு எண் : 000101236907
வங்கி பெயர் : ஐசிஐசிஐ வங்கி
கிளை : செனடாப் சாலை கிளை, சென்னை
ஐ.எஃப்.எஸ்.சி குறியீடு : ICIC0000001
எம்.ஐ.சி.ஆர் குறியீடு : 600229002

என்ற வங்கி கணக்குக்கு மின்னணு பரிவர்த்தனை மூலமாகவும், வங்கி வரைவோலை மற்றும் காசோலைகளை, ‘Tamil Nadu Animal Welfare Board CSR Funds’ என்ற பெயரில் எடுத்து, உறுப்பினர் செயலர், தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் / இயக்குநர், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள், 571, அண்ணா சாலை, சென்னை-35. என்ற முகவரிக்கும் அனுப்பிடலாம் என்று தெரிவித்திருந்தது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழ்நாடு கூடுதல் முதன்மைச் செயலாளர் டி.எஸ். ஜவஹரிடம் காசோலை வழங்கினார் உடன் ஆளுநரின் செயலாளர் ஆனந்த் ராவ் பாட்டில்

தமிழ்நாடு பிராணிகள் நல வாரியத்தின் இந்த கோரிக்கையை ஏற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரு தினங்களுக்கு முன் 10 லட்சம் ரூபாய் நிதி அளித்திருந்தார், மேலும் பிராணிகளின் நலனில் அக்கறை உள்ளவர்கள் அதற்காக நிதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கால்நடை பராமரிப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த நிதியத்தில் உள்ள நண்கொடையைக் கொண்டு அந்தந்தப் பகுதிகளில் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் மூலம் வீதிகளில் உணவின்றி அல்லல்படும் விலங்குகளுக்கு, தேவைக்கேற்ப உணவுப் பொருட்கள் விநியோகிப்பதை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ள கமிட்டி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.